மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

ஜி.எஸ்.டி. கட்டமைப்பு பாதுகாப்பானது! - பனகரியா

ஜி.எஸ்.டி. கட்டமைப்பு பாதுகாப்பானது! - பனகரியா

சரக்கு மற்றும் சேவை வரியில் நான்கு அடுக்கு வரி முறை பாதுகாப்பானது என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரியை அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அளவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தநிலையில், சில தினங்களுக்குமுன்பு அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதாவது, ஜி.எஸ்.டி.யில் நான்கு அடுக்கு வரி விதிப்பு முறை கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நான்கு அடுக்கு வரி விதிப்பு முறையில் உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்கு 6 சதவிகித வரியும் நிரந்தர வரியாக 12 மற்றும் 18 சதவிகித வரியும் ஆடம்பரப் பொருட்களுக்கு 26 சதவிகித வரியும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்துப் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறுகையில், ”இந்த நான்கு அடுக்கு வரி முறையால் பணவீக்க விகிதம் குறையும். இதன்மூலம் நுகர்வோர்களுக்கும் பலன் கிடைக்கும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நாடு முழுவதும் உற்பத்திப் பொருட்களுக்கு ஒரே வரி விதிப்பு முறை நிலவும். இரட்டை வரி விதிப்பைவிட, ஒருமுனை வரி விதிப்பு முறை சிறப்பானது மற்றும் பாதுகாப்பானது” என்றார் அவர்.

ஆடம்பரப் பொருட்கள், புகையிலை மற்றும் பான் மசாலா ஆகியவற்றுக்கு கூடுதலாக வரி விதிக்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இதற்கு சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்கவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon