மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

தீபாவளி: 3,000 கிலோ தங்கம் விற்பனையாகும்!

தீபாவளி: 3,000 கிலோ தங்கம் விற்பனையாகும்!

தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குகின்றன. அந்த போனஸ் பணத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, தீபாவாளியை ஒட்டிய நாட்களில் தங்கம் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போனஸ் பணம் பலர் கைகளில் இருப்பதால் இந்த தீபாவளியை முன்னிட்டு தங்கம் வாங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இந்த ஆண்டு தீபாவளிக்கு, 3,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறார்கள் நகை விற்பனையாளர்கள்.

தமிழகத்தில் உள்ள 35,000 நகை கடைகளில் தினமும் சராசரியாக 1,200 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் கன மழை பெய்தது. இருப்பினும், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் 2,850 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின. இந்த ஆண்டு தீபாவளிக்கு அதை விட அதிக அளவில் விற்பனை நடக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம் ரூபாய் 2,840க்கும் ஒரு சவரன் ரூபாய் 22,720க்கும் விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட தற்போது தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 390, சவரனுக்கு ரூபாய் 3,130 வரை உயர்ந்துள்ளது. இருப்பினும், நகை கடைகளில் கூட்டம் அதிகம் உள்ளதால் தீபாவளிக்கு, 3,000 கிலோ தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, தங்க ஆபரண விற்பனையாளர்கள் கூறியதாவது: “தீபாவளிக்கு மொத்தமாக பணம் கொடுத்து, தங்கம் வாங்க வசதி இல்லாத பலர் நகை சீட்டு திட்டத்தில் சேருவர். ‘தீபாவளி பண்ட்’ என்று சேர்ப்போரிடமும் மாதந்தோறும் பணம் செலுத்துவர். அதன்படி தற்போது, பண்ட் பிடித்த பலரும் நகை கடைகளில் பணம் செலுத்தி பதிவு செய்து அதற்கான டோக்கனை வாங்கி செல்கின்றனர். அவற்றை பெறும் வாடிக்கையாளர்கள் தீபாவளிக்கு நகை வாங்குவர். கடந்த ஆண்டை விட, தங்கம் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும், போனஸ் காரணமாக பணப்புழக்கம் நன்கு உள்ளது. இதனால், தீபாவளிக்கு முந்தைய நாள், தீபாவளியன்று, கடந்த ஆண்டை விட 10 சதவிகிதம் வரை கூடுதலாக தங்கம் விற்பனையாக வாய்ப்புள்ளது. எடை குறைவான நகைகளை வாங்கவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்”. இவ்வாறு அவர்கள் கூறினர்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon