மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

எஸ்.எம்.எஸ். மூலம் வருமான வரி தகவல்!

எஸ்.எம்.எஸ். மூலம் வருமான வரி தகவல்!

‘நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் வருமான வரியை செலுத்துவதில்லை என நிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரி செய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் முறை கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகை, வருமான வரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையா என தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித்தொகை செலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம் உடனடியாக கேட்டு விடலாம்’ என்று மத்திய நேரடி வரித்துறை கழக தலைவர் ராணி சிங் நாயர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, வருமானவரி பிடித்தம் செய்த தகவலை எஸ்எம்எஸ்ஸில் பெறும் வசதியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாத சம்பளக்காரர்கள், தங்களுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் விவரத்தை இனி எஸ்எம்எஸ் மூலம் பெறலாம். நிறுவனத்தில் வழங்கும் சம்பள சிலிப்புடன் எஸ்எம்எஸ் விவரத்தை ஒப்பிட்டு பார்த்து தெளிவு பெறலாம். டிடிஎஸ் தொடர்பான குறைகளை மத்திய நேரடி வரிகள் ஆணையமும் விரைந்து தீர்க்க வேண்டும்’’ என்றார்.

இந்த எஸ்எம்எஸ் வசதியை மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி) விரைவில் செயல்படுத்த இருக்கிறது. ‘தற்போது 2.5 கோடி சம்பளதாரர்கள் இதனால் பயன்பெறுவார்கள். இதை தொடர்ந்து சம்பளதாரர் அல்லாத வருமான வரி செலுத்துவோர் 4.4 கோடி பேருக்கும் இந்த வசதி நீட்டிக்கப்பட இருக்கிறது. வரி செலுத்துவோர் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து வைக்க வேண்டும்’ என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon