மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

14% பேர் மட்டுமே ‘செட்’ தேர்வில் தேர்ச்சி!

14% பேர் மட்டுமே ‘செட்’ தேர்வில் தேர்ச்சி!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்காக அகில இந்திய அளவில் ‘நெட்’ தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. அதேபோல், மாநில அளவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் ‘செட்’ தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேருவதற்கான செட் தேர்வு பிப்ரவரியில் நடந்தது. தேர்வை நடத்திய அன்னை தெரசா பல்கலை நேற்று தேர்வின் முடிவை வெளியிட்டது. அதில், 14% பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.

செட் தேர்வை 53,803 பேர் எழுதினர். அதில், 23,271 பேர் மட்டுமே நிர்ணயித்த ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதில், பல்கலை மானியக்குழு விதிகளின்படி, பொதுப்பிரிவில் 3,704 பேர், பாட வாரியான பிரிவில் 3,832 பேர் என மொத்தம் 7,536 பேர் மட்டுமே பேராசிரியர் பணியில் சேர தகுதி பெற்றுள்ளனர். அதாவது, 14% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, செட் தேர்வுக்குழு உறுப்பினர் செயலர் பேராசிரியர் கலா, “தேர்வர்களின் மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண், தேர்ச்சி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அவரவரின் தேர்வு முடிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல், வினாத்தாள், விடைக்குறிப்பு போன்ற அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ‘நெட்' மற்றும் ‘செட்’ தேர்வு சங்க தலைவர் நாகராஜன், “அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பல்கலையின் இணையதளத்தில் பதிவு எண், வரிசை எண், மொபைல் போன் எண், தேர்வு எழுதிய பாடம், தேர்வு மையம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்த தேர்வர்களுக்கு மட்டும் ஆன்லைனில் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. பதிவு எண், வரிசை எண்ணை மறந்தோர், தெரசா பல்கலைக்கு மின்னஞ்சல் அனுப்பி அதன் மூலம் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் ‘செட்’ தேர்வு நடத்தும் அனுமதியைக் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon