மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

தங்க பத்திர விற்பனை தொடங்கியது!

தங்க பத்திர விற்பனை தொடங்கியது!

ரிசர்வ் வங்கியின் தங்க பத்திர விற்பனை நேற்று துவங்கியது. ஒரு கிராம் ரூ.2,957 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் தங்க பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதுவரை ஐந்து கட்டங்களாக தங்க பத்திரங்கள் வெளியிடப்பட்டது. ஆறாவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட தங்க பத்திரம் விற்பனை நேற்று தொடங்கியது.

இந்த பத்திரங்கள் 999 தூய்மையுடைய தங்கம் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இந்திய நகை விற்பனையாளர் சங்கத்தின் முந்தைய விற்பனை நிலவரத்தின்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 999 தூய தங்கம் ஒரு கிராம் சராசரி விலை ரூ.3007 ஆக இருந்தது. ஆனால், தீபாவளி பண்டிகைக்கு விற்பனையை அதிகரிக்கவும், மக்களின் கவனத்தை தங்க பத்திர முதலீட்டை நோக்கி திருப்பும் வகையிலும் இதில் ரூபாய் 50 குறைத்து நிர்ணயித்துள்ளது ரிசர்வ் வங்கி. இதற்கு அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த ஐந்து பத்திரங்கள் மூலம் சுமார் ரூ.3,060 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

இந்த தங்க பத்திர திட்டத்தில் குறைந்த பட்சம் இரண்டு கிராம் முதல் அரை கிலோ தங்கம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகள். ஐந்து ஆண்டுக்கு பிறகு வெளியேறலாம். அஞ்சலகம், குறிப்பிட்ட சில வங்கிகள் மூலம் இதில் முதலீடு செய்யலாம்.

மத்திய அரசு ஆண்டுக்கு 300 டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனால் அரசின் பெரும்பகுதியான அந்நியச் செலாவணி தங்கத்தை வாங்குவதற்கே செலவாகிறது. இதைத் தடுக்கவும், தங்கம் இறக்குமதியைக் குறைக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்ததுதான் தங்க பத்திர முதலீட்டு திட்டம். இதோடு சேர்த்து, தங்க நாணயத் திட்டம், தங்க முதலீட்டு திட்டத்தையும் கொண்டு வந்தார். இதில் தங்கத்தை நேரடியாக தங்கமாக வாங்காமல் தங்கத்தின் மதிப்பில் விற்பனை செய்யப்படும் பத்திரங்களை வாங்குவதுதான் தங்க பத்திர திட்டமாகும்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon