மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

சன் கிளாஸை எவ்வாறு தேர்வு செய்வது?

சன் கிளாஸை எவ்வாறு தேர்வு செய்வது?

இளைஞர்கள் ஸ்டைலாக கூலர் கண்ணாடி அணிவதை பார்த்திருப்போம். வெறும் ஸ்டைலுக்காக மட்டும் கூலர் கண்ணாடிகள் அணிவதில்லை. அதற்கு ‘சன் கிளாஸ்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. எதற்காக சன் கிளாஸ் அணிய வேண்டும்? எப்படி தேர்வு செய்வது?

சன் கிளாஸ் எனப்படும் கூலர்ஸ் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் கதிர்கள் கண்களை தாக்காமல் இருப்பதற்கு தான் பயன்படுகிறது. அல்ட்ரா வயலட் கதிர்களில் UVA, UVB, UVC என மூன்று வகையுண்டு. இதில் பூமிக்கு வந்து நம்மை தாக்கக்கூடிய கதிர்கள் UVA, UVB இரண்டு மட்டும்தான். இக்கதிர்களின் தாக்கம் அதிகமானால் கண்களின் ரெட்டினாவில் பாதிப்புகள் ஏற்படும். கண்ணில் மேல்புறமாக சதை வளரச் செய்யும். கேட்ராக்ட் என அழைக்கப்படும் கண்புரை நோய் வருவதற்கு முக்கிய காரணியாக அமையும். விவசாயம், கட்டடக் கட்டுமானம் ஆகிய கடுமையான வேலைகளை நேரடி சூரிய ஒளியில் செய்பவர்களுக்கு காலபோக்கில் கேட்ராக்ட் வருவதற்கு அல்ட்ரா வயலட் கதிர்கள்தான் காரணம். இது மாதிரியான பாதிப்புகளைத் தடுப்பதற்கும், பயணங்களின்போது கண்களில் தூசு, பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கும் சன் கிளாஸ் அணிகிறார்கள். சன் கிளாஸில் UVR 400 என்று அச்சிட்டிருப்பார்கள். இதன் அர்த்தம் இவ்வகை கிளாஸ்கள் அல்ட்ரா வயலட் கதிர்களை 400 நேனோ மீட்டர் முன்பாகவே தடுத்து நிறுத்திவிடும் என்பதாகும். தரமான நிறுவனங்களின் மூலம் தயாராகும் கண்ணாடிகளில் மட்டும்தான் ‘யூவி புரொடக்சன் லேயர்’ சரியாக பூசப்பட்டிருக்கும். மலிவு விலையில் விற்கப்படும் கண்ணாடிகளில் இந்த லேயர் இருக்காது. வெறுமனே UVR400 என போட்டிருப்பார்கள். இதை அணிவதால் எந்த பயனும் இருக்காது.

மேலும் இத்தகைய மலிவு விலையில் கிடைக்கும் கண்ணாடிகளை தொடர்ந்து அணிபவர்களுக்கு கண் வீக்கம், எரிச்சல், கண்களில் நீர் வழிதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். தரமற்ற உலோகம், மட்டரக பிளாஸ்டிக், போலியான சாயங்கள் கொண்டு இத்தகைய கண்ணாடிகள் தயாராவதால் ’கான்டாக்ட் டெர்மடைடிஸ்’ போன்ற சரும நோய் ஏற்பட வாய்ப்புண்டு. கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோல் சிலருக்கு சிவப்பாக கூட மாறும். ஒரு சிலருக்கு கரு வளையங்களை உருவாக்கி விடும். தரமான நிறுவனங்களில் தயாராகி தகுந்த உத்திரவாதத்துடன் விற்பனைக்கு வரும் சன் கிளாஸ்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். கண்களின் பாதுகாப்புக்கு அணியும் சன் கிளாஸ்களை வெறும் ஸ்டைலுக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடாது. தரமான ஸ்வான் கிளாஸ்கள் ரூபாய் 500 முதல் கிடைக்கிறது. ரூபாய் 1,000-க்கு நல்ல தரமான கூலர்ஸ் கிடைக்கும். போலி சன் கிளாஸ்களை அணிந்து ஆரோக்கியமாக இருக்கும் கண்களை கெடுத்துக் கொள்ளக்கூடாது. ஸ்டைலுக்காக பயன்படுத்த ஆரம்பித்து வீணாக கண் பிரச்னையை வரவைத்து விடக்கூடாது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon