மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

கேரளா: இந்துகள் - இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் யாகம்!

கேரளா:   இந்துகள் - இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் யாகம்!

கடந்த சில காலமாக இஸ்லாமியர்கள் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவது, விநாயகர் சிலை வடிப்பது போன்ற விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்துகளும் இஸ்லாமியர்களும் இணைந்து யாகம் நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்காக இந்துகளும் இஸ்லாமியர்களும் இணைந்து ‘மிர்த்யுஞ்சயா’ யாகம் நடத்துகின்றனர். இந்திய ராணுவத்தில் உள்ள ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுப்பதற்காகத்தான் மஹா ‘மிர்த்யுஞ்சயா’ யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்தின்போது, அமிர்த செடியின் தண்டு, நெய், எள், ஆல மரத்தின் பூக்கள் உள்ளிட்ட ஏழு முக்கிய காணிக்கைகள் கடவுளுக்கு 1008 முறை வழங்கப்படும்.

நவம்பர் 4ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி, மஹா மிர்த்யுஞ்சயா யாகம் அங்குள்ள 400 வருடம் பழமை வாய்ந்த ஶ்ரீதுர்கா பகவதி கோயிலில் நடத்தப்படும். இதற்கான செலவுகளை இந்துகளும், இஸ்லாமியர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வின்போது கே.பி. சுலைமான் ஹாஜி என்னும் இஸ்லாமியர் 2,000 பொது மக்களுக்கு அன்னதானம் செய்கிறார்.

இது குறித்து அவர், “மக்கள் சாதி, மதத்தின் பெயரால் சண்டை போட்டுக் கொள்வது மிகவும் வேதனையாக உள்ளது. எங்களுக்குள் எந்த பிரிவினையும் கிடையாது. ஒற்றுமையாக இருப்பதே எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்காகவும் எல்லையில் ராணுவ வீரர்களுள் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் நலம்பெற வேண்டுவது நமது கடமை” என தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் உள்ள 2,000 கோயில்களின் தலைமை பூசாரி தாந்திரி தாரனனெல்லூர் தேக்கினேதத் பத்மநாபன் உன்னி நம்பூதிரியின் குழுக்கள் மூலம் இந்த யாகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon