மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 6 டிச 2019

மாவோயிஸ்டுகள் தலைவர் தப்பினார்!

மாவோயிஸ்டுகள் தலைவர் தப்பினார்!

ஒடிஸா - ஆந்திரா எல்லையோர மலைவாழ் கிராமத்தில் 24 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், மாவோயிஸ்டு எதிர்ப்பு படையின் மிக முக்கியமான முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது. ஆந்திரா தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளமாக பரந்து விரிந்திருக்கும் மத்திய இந்தியாவின் காடுகளில் மாவோயிஸ்டுகள் ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனை சிகப்பு தாழ்வாரம் என்று இந்திய ஊடகங்களும், அரசும் வர்ணிக்கின்றன. வசந்தத்தின் இடி முழக்கம் என்று சாருமஜூம்தார் தலைமையில் நக்சல்பரி கிராமத்தில் தொடங்கிய மாவோயிஸ்ட் போராட்டம் பல பிளவுகளையும், சிதைவுகளையும் சந்தித்தபோதிலும் இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது. ஆந்திராவில் பலம் பொருந்திய கெரில்லாக்களாக இருந்த நக்சலைட்டுகளை கோப்ரா ஆக்‌ஷன், கிரேகவுண்ட் என பல பெயர் கொண்ட ஆழ ஊடுருவும் அதிரடிப்படைகள் வேட்டையான ஆந்திராவில் பலமிழந்தவர்கள் ஒடிஸா, ஆந்திரா எல்லையோரம் தொடங்கி சத்தீஷ்கர் வரை பரந்து விட்டார்கள். காடுகளில் வாழும் பழங்குடிகள்தான் அவர்கள் அஸ்திவாரம் என்ற போதிலும் அவர்களுடைய தற்போதைய தாக்குதல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

என்ன நடந்தது?

காடுகளில் வாழும் மாவோயிஸ்டுகள் அமைப்பை பலப்படுத்த அடிக்கடி மக்களோடும் தங்களின் கட்சி உறுப்பினர்களோடும் கூட்டங்களை நடத்துவார்கள். அப்படி கூட்டங்களுக்கு மாவோயிஸ்டு அமைப்புகளின் மொத்த தலைவர்களும் ஒன்றாகச் செல்வதில்லை. ஒரு தலைவர் சென்றால் அவருக்குப் பாதுகாப்பாக ஆறு நன்கு பயிற்சி பெற்ற கெரில்லா போராளிகள் தலைவர்களுடன் செல்வார்கள். துரிதமாகச் செயல்படுவது, ராணுவத்தினரை வீழ்த்தி ஆயுதங்களைக் கைப்பற்றுவது, ஆபத்து காலத்தில் அதிரடியாகச் செயல்பட்டு, தங்கள் தலைவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் வல்லவர்கள். அப்படித்தான் இதற்கு முன்னர் 2008 மாவோயிஸ்டுகள் ரகசியமாகக் கூடுகிறார்கள் என்ற தகவல் கிடைக்க அதிரடியாக நுழைந்த படையினர் தாக்கியதில் 28 மாவோயிஸ்டுகள் பலியானார்கள். அதன் பின்னர் பதிலுக்கு மாவோயிஸ்டுகள் எத்தனையோ தாக்குதல்களை நடத்தியபோதிலும் அவர்களால் மிகப்பெரிய தாக்குதல் எதனையும் நடத்த முடியவில்லை. அதன் பிறகு இப்போதுதான் ஒடிசா, ஆந்திரா எல்லையோர வனப்பகுதியான மல்கங்ரியில் மாவோயிஸ்டு தலைவரின் வழிநடத்தலில் 50 மாவோயிஸ்டுகள் ஒன்றுகூட இருக்கிறார்கள் என்று கிடைத்த தகவலையடுத்து ஒடிசா, ஆந்திரா கூட்டு அதிரடிப்படை அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்கியது. இத்தாக்குதலில் 24 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த ஆபரேஷனில் சில மாவோயிஸ்டுகள் மட்டும் தப்பிச் சென்றனர்.

இத்தாக்குதல் நடவடிக்கை முடிந்த பிறகு உடல்களைப் பரிசோதித்த அதிரடிப்படையினர் அதில் மிக முக்கிய நபர் ஒருவரின் உடல் இருக்கிறதா என பரிசோதித்தனர். ஆனால், இந்த மோதலில் மூத்த கமாண்டோ மாவோயிஸ்டுகள் சிலரும், கஜர்லா ரவி என்ற உதயனும், சலாபதி என்ற அப்பாராவும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் விரைவில் உறுதியாகும் என்னும் நிலையில் அதிரடிப்படையினர் மாவோயிஸ்டு மத்தியக்குழு உறுப்பினரான ஆர்.கே. எனப்படும் ராமகிருஷ்ணாவின் உடலைத்தான் கொல்லப்பட்டவர்களில் தேடினார்கள். ஆனால், அவரது உடல் இல்லை. அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்னும் நிலையில் மூத்த மாவோயிஸ்டு தலைவரான கணபதி, இத்தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை அதே மாலகங்கிரி பகுதியில் ஒடிசா, ஆந்திரா படைகளின் கூட்டு தேடுதல் வேட்டையில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon