மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 அக் 2016

இந்திய - சீன எல்லையில் முதன்முறையாக பெண் வீரர்கள்!

இந்திய - சீன எல்லையில் முதன்முறையாக பெண் வீரர்கள்!

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் 1991ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நம் நாட்டின் முப்படைகளான ராணுவம், கடற்படை விமானப் படை ஆகியவற்றில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண் வீரர்களுக்கு இணையாக பெண் வீரர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சீன எல்லையில் முதன்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண் வீரர்கள் இந்திய திபெத் எல்லைக்காவல் படை நியமிக்கப்படுகின்றனர். இந்திய - திபெத் எல்லைக்காவல் படையில் 80,000 வீரர்கள் உள்ளனர். இந்த படை கடந்த 1962ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்புக்குப்பின் உருவாக்கப்பட்டது. இந்த காவல் படை தொடங்கி, 55 ஆண்டுகள் ஆகிறது. அதற்கான விழா நேற்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண் மற்றும் பெண் வீரர்கள் கலந்து கொண்டு பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினார்கள். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிப்பது, பதில் தாக்குதல் நடத்துவது ஆபத்தான நேரங்களில் தப்பிப்பது உள்பட பல விஷயங்களைச் செய்து காண்பித்தனர். அப்போது, தலைமை இயக்குநர் கிருஷ்ண சவுத்ரி, “இந்திய - சீன எல்லையில் 15 எல்லைச்சாவடிகளில் 100 பெண் வீரர்கள் நியமிக்கும் நடைமுறைகள் சமீபத்தில் முடிவடைந்தது. போர்த் தளவாட மற்றும் ஆயுதப் பயிற்சி பெற்ற இப்பெண் வீரர்களுக்குத் தேவையான வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அதிகாரிகள், “இந்தப் பெண் வீரர்களில் பெரும்பாலானோர் ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள எல்லைச் சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சலப்பிரதேச எல்லையில் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் சில எல்லைச்சாவடிகளில் பெண் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்திய - திபெத் எல்லைக்காவல் பணிக்காக 500 பெண் வீரர்கள் கொண்ட படை இந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வந்தது. போர்த் தளவாடப் பயிற்சியும் கடினமான மலைப்பகுதியில் தாக்குப் பிடிக்கும் பயிற்சியும் 44 வாரங்களுக்கு அளிக்கப்பட்ட பிறகு இப்படை செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள பெண் வீரர்கள் கடல் மட்டத்தில் இருந்து 8,000 அடி முதல் 14,000 அடி உயரம் கொண்ட இடங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் இந்தியப் பகுதியின் கடைசி கிராமத்தில் உள்ள மானா கணவாய் எல்லைச்சாவடியும் இதில் அடங்கும். இந்தச் சாவடிகளில் பெண் வீரர்களின் எண்ணிக்கையை 40% வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கடினமான நிலப்பகுதி மற்றும் காலநிலை கொண்ட இந்திய - சீன எல்லையில் பெண் வீரர்களை இந்தியா நியமிப்பது இதுவே முதன்முறை” என்று தெரிவித்துள்ளனர்

அதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று முதன்முதலாக ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணிபுரியும் பெண் அதிகாரிகளும் அணிவகுப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon