மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

தூய்மைக்காக மோடியிடம் பாராட்டு பெற்ற சிறுவன்!

தூய்மைக்காக மோடியிடம் பாராட்டு பெற்ற சிறுவன்!

கங்கை நதி தூய்மை திட்டத்துக்காக தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை பிரதமர் மோடிக்கு அனுப்பி அனைவரிடத்திலும் தூய்மையை மேம்படுத்தும் வகையில் ஒரு அற்புத செயலைப் புரிந்துள்ளான் இச்சிறுவன். சென்னை மடிப்பாக்கம் சந்நிதி தெருவைச் சேர்ந்த கணேஷ் கண்ணன் – சங்கீதா தம்பதியின் மகன் ஷேஷாங் (வயது 10). ஆதம்பாக்கத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். ஷேஷாங் சமீபத்தில் ஜெயின் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற சமஸ்கிருத போட்டியில் வென்று ஆயிரம் ரூபாயைப் பரிசாக பெற்றுள்ளான்.

இப்பணத்தை தான் பயன்படுத்தாமல் கங்கை நதி தூய்மை திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளான். அதோடு கடிதம் ஒன்றையும் சேர்த்து அனுப்பி வைத்துள்ளான். அக்கடிதத்தில், ‘இந்தியாவின் புனித நதி கங்கை. அதனை முறையாக பராமரிக்க வேண்டும். நான் இயற்கையை ரசிப்பவன். அதனால் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் போன்ற பொருட்களை கூட பயன்படுத்துவதில்லை’ என்று எழுதியிருந்தான். இதற்கு மோடியிடம் இருந்து மாணவனுக்குப் பாராட்டு கடிதம் வந்துள்ளது.

இதுகுறித்து ஷேஷாங் கூறியதாவது: “எனக்கு தூய்மையாக இருப்பது, சுற்றுசூழலைப் பாதுகாப்பதெல்லாம் மிகவும் பிடிக்கும். அதன்படி பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபட்டு செயலாற்ற எனக்கு விருப்பம். எனவே, நான் பரிசுத்தொகையை பிரதமருக்கு அனுப்பினேன்” என்று தெரிவித்துள்ளான். பள்ளி நிர்வாகி ராஜேந்திரன் உட்பட இயற்கை ஆர்வலர்களும் மாணவனை பாராட்டி வருகின்றனர்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon