மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 ஜன 2020

திருமணமான இரண்டு மணி நேரத்தில் விவாகரத்து!

திருமணமான இரண்டு மணி நேரத்தில் விவாகரத்து!

சவுதி அரேபியாவில் திருமணப் பந்தத்தை முறித்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் திருமணமான இரண்டு மணி நேரத்தில் மணமகன் மணமகளை விவாகரத்து செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா, ஜெட்டாவில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் மணமகன், மணமகளை விவாகரத்து செய்துள்ளார்.

பெரும்பாலும் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருக்கு ஏதாவது ஒரு நிபந்தனை வைப்பது வழக்கம். அதேபோல் திருமணத்துக்கு முன், பெண் வீட்டாருக்கு மணமகன் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்து இருந்தார். திருமண நிகழ்ச்சியின் போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் மணமகளால் பதிவேற்றம் செய்யக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. மேலும், திருமணத்துக்குப் பிறகு, என் மனைவி சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை என மணமகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருமணம் முடிந்ததும் மணமகள் தனது தோழிகளுக்கு திருமண போட்டோவை ‘ஸ்னாப்சாட்’ வழியாக அனுப்பி வைத்தார்.

அதிர்ச்சியடைந்த மனமகன் என் நிபந்தனையை மீறி, என் மனைவி நடந்து கொண்டாள். என் நிபந்தனைக்கு கட்டுப்படாத மனைவியுடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறி உடனடியாக விவாகரத்து கேட்டார். அதை தொடர்ந்து இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் முடிந்து இரண்டே மணி நேரத்தில் மணமகன் விவாகரத்து கேட்டது மிக கடுமையான செயல் என மணமகள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்தாண்டு தொடக்கத்தில், திருமணம் முடிந்து முதலிரவை கொண்டாடும்போது தனது கணவரை கண்டு கொள்ளாமல் சமூக வலை தளங்களில் மட்டுமே கவனம் செலுத்திய மணப்பெண்ணை மணமகன் விவாகரத்து செய்தார். கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் சவுதி அரேபியாவில் 1,57,000 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயம் 44,000 விவாகரத்துகள் பதிவாகியுள்ளது. அதில் திருமணமான ஓர் ஆண்டுக்குள் விவாகரத்து கேட்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon