மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

பாகிஸ்தான் பயங்கரம்: 41 பேர் பலி!

பாகிஸ்தான் பயங்கரம்: 41 பேர் பலி!

பாகிஸ்தானில் நேற்று (திங்கள்கிழமை) இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பயிற்சி காவலர்கள் 41 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் உள்ள காவலர் பயிற்சி முகாமில் நேற்றிரவு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 41 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பயிற்சி காவலர்கள் மற்றும் துணை ராணுவப்படையைச் சேர்ந்த 106 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக பலுசிஸ்தான் மாகாண சுகாதாரத்துறை உயரதிகாரி நூர் ஹக் பலோச் கூறும்போது, “திங்கட்கிழமை இரவில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் போலீஸ் பயிற்சி மையத்துக்குள் நுழைந்தனர். இரண்டு பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டனர். இதில் 41 பேர் கொல்லப்பட்டனர். 106 பேர் காயமடைந்தனர்” என்றார்.

துணை ராணுவப்படை மேஜர் ஜெனரல் ஷேர் அப்கான் கூறும்போது, “தாக்குதலில் ஈடுபட்டவர்களைச் சிலர் ஆப்கனில் இருந்து தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இந்த அமைப்பு அல் கொய்தா ஆதரவு இயக்கமாகும்” என்றார்.

பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்பராஸ் புக்தி, “தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இருவர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டதால் பலியாகினர். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டாலும் யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என்ற தேடுதலில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

தாக்குதல் நடந்தபோது பயிற்சி மையத்தில் 700 பேர் இருந்துள்ளனர். 4 முதல் 6 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக திங்கட்கிழமை காலையில் குவெட்டா நகரில் போலீஸ் உயரதிகாரி ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தானி தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முகமது குராசனி இதனைத் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பத்திரமாக பதுங்கும் இடத்துக்கு திரும்பியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon