மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

காற்று மாசுபாடு, கருவைப் பாதிக்கும் - சுற்றுச்சூழல் மையம்!

காற்று மாசுபாடு, கருவைப் பாதிக்கும்  - சுற்றுச்சூழல் மையம்!

இந்தியாவில் காற்று மாசுபாடு அச்சுறுத்தும் விஷயமாக உருவாகி வருகிறது. குறிப்பாக பெருநகரங்களில் உருவாகும் மாசு, பல தலைமுறைகளைப் பாதிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். டெல்லி போன்ற பெருநகரங்களில் நிலவும் காற்று மாசுபாடு, அங்கு வாழும் மக்களுக்கு தலைமுறைகளைக் கடந்தும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, தொழில்சார் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார மையத்தின் இயக்குநர் டி.கே.ஜோஷி கூறியதாவது: ‘அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் சுகாதார அறிவியலுக்கான தேசிய நிறுவனம் சமீபத்தில் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. இதன்படி, காற்று மாசுபாடு அதிகம் இருக்கும் நகரத்தில் வாழும் ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, அங்குள்ள காற்று மாசு அந்தக் கருவைப் பாதிக்கும் பட்சத்தில் அந்தக் கருவின் ஜீன்களில் மாற்றம் நிகழ்கிறது. இந்த ஜீன் மாற்றங்கள் அந்தக் கருவோடு நிற்பதில்லை. அதன் சந்ததியில் வரும் குழந்தைகளுக்கும், அதைத் தொடர்ந்து, அவர்களின் குழந்தைகளுக்கும் என தலைமுறையைத் தாண்டியும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால், ஆஸ்துமா, புற்றுநோய், பக்கவாதம் போன்ற குணப்படுத்த முடியாத பல நோய்கள் அந்த சந்ததியினரிடையே அதிகரிக்கும். இதனிடையே, உள்புற காற்று மாசும், அதாவது வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுவின் பாதிப்பு குறித்தும் உறுதியாகக் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது’ என்றார் ஜோஷி.

டெல்லி ஐஐடி பேராசிரியர் முகேஷ் காரே கூறுகையில், ‘நகரங்களில் இருக்கும் வீட்டுக்குள் நிலவும் காற்று மாசு குறித்து மிகத் துல்லியமாக இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள்ளேயே பணிபுரிந்து வருகின்றனர். இதனால், வீட்டுக்குள் நிலவும் காற்று மாசு குறித்து அறிய வேண்டியதன் அவசியத்தை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உணர்த்தியுள்ளன’ என்றார். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு புதிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்க வேண்டும்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon