மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 அக் 2016

தியேட்டர் கட்டணங்களை மாற்ற அரசாணை – நீதிமன்றம் உத்தரவு!

தியேட்டர் கட்டணங்களை மாற்ற அரசாணை – நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள தியேட்டர் கட்டணங்களை உயர்த்த மறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

‘தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் குளிரூட்டப்பட்ட திரையரங்குகளாக இருந்தால் ரூ.50-ம், மற்ற திரையரங்குகளுக்கு ரூ.30-ம் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2000இல் 2,339 திரையரங்குகள் இருந்தன. இது, 2014இல் 995 ஆக குறைந்து விட்டது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் 1,400-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. நவீன காலத்துக்கு ஏற்ப, தொன்மையான சட்டங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளாததே இதற்கு முக்கிய காரணமாகும். தற்போது கேளிக்கை வரி 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கு ஊழியர்களின் அகவிலைப்படியும் 2006 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், 771 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2009இல் யூனிட்டுக்கு ரூ.3.50 ஆக இருந்த மின் கட்டணம், தற்போது ரூ. 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக திரையரங்குகளின் நுழைவுக்கட்டணத்தை உயர்த்தக்கோரி, கடந்த 2006 முதல் 2013 வரை 15 முறை மனு கொடுத்துள்ளோம். இறுதியாக 2013 டிசம்பர் 19ஆம் தேதி இந்த கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரியும் மனு கொடுத்துள்ளோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எட்டு வாரத்திற்குள் எங்களின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது. இருப்பினும், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே திரையரங்கு நுழைவுக்கட்டணத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும், தமிழக உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, அக்டோபர் 21ஆம் தேதி பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசால் அக்டோபர் 21இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, மனுதாரர்களின் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து ஒரு மாதத்துக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon