மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

ஃபேஸ்புக் மெஸெஞ்சரின் ‘அநியாயக் கொள்ளை’ - கவனம்!

ஃபேஸ்புக் மெஸெஞ்சரின் ‘அநியாயக் கொள்ளை’ - கவனம்!

ஃபேஸ்புக் மூலம் வியாபாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக்கின் மூலம் மக்களால் சிலவற்றை வாங்க முடியும், மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்ற வசதிகளெல்லாம் திடீரென்று ஒருவர் சொல்லிக் கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அது ஆச்சர்யப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. கேள்வி கேட்க வேண்டிய சம்பவம். எப்படி? ஏன்? யாருக்காக? இந்த மூன்று கேள்விகளை உருவாக்கி அதன்பின் பயணித்தால் அதற்கான விடை கிடைத்துவிடும்.

ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் புதிதாக சில அப்டேட்களை மக்கள் பார்த்திருக்கலாம். எதற்காக இரண்டு இடத்தில் மெஸேஜ் செய்ய வேண்டும். மொபைலுக்கு வரும் நார்மல் மெஸேஜையும் ஃபேஸ்புக் மெஸெஞ்சரிலேயே படித்துக் கொள்ளலாமே? வீணாக எதற்கு இரு இடங்களுக்குச் சென்று மொபைலின் செயல் திறனைக் குறைக்க வேண்டும்? என்றெல்லாம் பசப்பு வார்த்தைகளின் மூலம் ஒரே இடத்துக்கு அனைத்து மெஸேஜ்களையும் கொண்டு வந்து ஃபேஸ்புக் ஒரு முயற்சி செய்தது. அது கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றது.

அதாவது ஃபேஸ்புக்கைத் தாண்டி, உங்களுக்கு யாரோ ஒருவர் அனுப்பும் மெஸேஜ், உங்கள் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் கம்பெனி தொடர்பான தகவல்கள், உங்கள் பேங்க் அக்கவுண்ட் பற்றிய தகவல்கள், உங்கள் நண்பர்களின் தகவல்கள், வங்கிக்கணக்குகளின் மூலம் நீங்கள் செய்யும் பணப்பரிவர்த்தனைகள் என அனைத்து தகவல்களும் மெஸெஞ்சர் அப்ளிகேஷனின் சர்வரில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வைக்கின்றன. உண்மையில், ஃபேஸ்புக்கின் மார்க் ஜூகர்பர்க் இவற்றையெல்லாம் உட்கார்ந்து படிப்பது கிடையாது. ஆனால், மொத்தமாக ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளை வைத்து எந்த விஷயத்துடன் நீங்கள் அதிகம் தொடர்பு வைத்திருக்கிறீர்கள்? என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியும்.

நம் கட்டுரைக்கு சம்மந்தமிருக்கும் PayPal பற்றியே பார்ப்போம். மார்க் ஜூகர்பர்கின் டீம் PayPal என்று அதன் சேமித்து வைக்கப்பட்ட டேட்டாவிலிருந்து வார்த்தையைத் தேடினால், PayPal என்ற வார்த்தை சம்மந்தமான அனைத்து உரையாடல்களும் வரிசையாக வரும். சரி, அமெரிக்காவில் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? என அந்த ரிசல்ட்டை வடிகட்டி Search பட்டனை அழுத்தினால், ‘அமெரிக்க ஜனத்தொகையில் மொபைல் பயன்படுத்துபவர்களில் 40 சதவிகிதம் பேர் மெஸெஞ்சரையும், PayPal மூலம் பணப்பரிவர்த்தனையும் செய்கிறார்கள்’ என்று காட்டும்.

அப்படியே PayPal CEOவுக்கு ஒரு போன் போட்டு, இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறது. நாம் ஏன் கூட்டு சேரக்கூடாதென, ஒரு பில்லியன் பயனாளர்களைச் மெஸெஞ்சரில் கொண்ட மார்க் ஜூகர்பர்க் கேட்டால் வெறும் 192 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட PayPal என்ன சொல்லும். அப்படியே ஆகட்டும் டும் டும் என்று சொல்லி இருவரும் கூட்டணி வைத்து ஒரு Beta டெஸ்ட்டிங் புரோகிராமை அமெரிக்காவில் மட்டும் ரிலீஸ் செய்கிறார்கள். அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திட, மற்ற நாடுகளிலும் இந்த ஆப்ஷனை வரவைக்கும்படி PayPal சொல்ல, இருங்க பார்க்கலாம் என தட்டிக்கழித்துக் கொண்டேவரும் மெஸெஞ்சர் டீம், ‘மேல எவ்வளவு காசு வேண்டுமானாலும் தருகிறேன்’ என PayPal வருகின்ற நிலைக்கு தள்ளுகிறது.

PayPalஐ பொருத்தவரை, இது ஃபேஸ்புக் செய்யும் தவறு அல்ல. ஆனால், மக்களுக்கு இதன்மூலம் என்ன கிடைக்கும். PayPal மூலமாக நடத்தப்படும் பணப்பரிவர்த்தனைகள், வரவு, செலவு ஆகியவற்றின் மொத்தத் தகவல்களும் ஏழு கடல், ஏழு மலை தாண்டி அரக்கனின் உயிரை கூண்டுக்குள் வைப்பதுபோல, ஒரு தனி மனிதனின் தகவல் வைக்கப்படுகிறது. அங்கு அந்த தகவல் பத்திரமாக இருக்கிறதா? யாரும் அதை அத்துமீறி பார்க்கிறார்களா? பயன்படுத்துகிறார்களா? என்று தெரியாமல் ஒவ்வொரு தகவலையும் மக்கள் தங்களையே அறியாமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாளை இந்திய தலைநகரத்துக்கு வரும், தமிழகத்துக்குள்ளும் வரும். அப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

- சிவா

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon