ஒரு கப்பல் மாலுமி, அவர் இறந்ததும் தூக்கிக்கொண்டு செல்லக் காத்திருக்கும் எமன் போன்ற ஒரு கதாபாத்திரம் மற்றும் ஒரு ராட்சஸ மீன் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வசனமே இல்லாமல் கடலிலே காட்சிகள் நகர்வதுபோல் அமைத்துள்ள கலகலப்பான திரைக்கதையின் மூலம் "வேலை செய்யவந்தால், வேலையை மட்டும் கவனிக்க வேண்டும்" என்ற கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது "Death Sails" என்ற அனிமேஷன் குறும்படம். இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் மித்ரி வொலோஷின்.
பெரும் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் விபத்துக்குள்ளாகிறது. அந்தக் கப்பல் கடல் கொள்ளையர்களின் கப்பலாகும். கப்பலில் இருந்து உயிர் பிழைத்த ஒரே ஒரு கடல் கொள்ளையன் கப்பலில் மீதமிருக்கும் நீளமான பகுதியில் மயக்கநிலையில் கிடக்கிறான். அவன் இறந்தால் அவன் உயிரைக் கொண்டு செல்வதற்கு அருகில் ஒரு விசித்திரமான உருவம் இருக்கிறது. பல நேரம் வேலையில்லாமல் இருப்பதால் போர் அடித்துப்போன உருவம் அருகில் இருக்கும் பெட்டியைத் திறக்கிறது. அது முழுக்க தங்கக் காசுகளாக உள்ளன. முதலில், அதை எடுத்து விளையாட ஆரம்பிக்கும் அந்த உருவம், விளையாட்டின் வினையாக கடலின் அடியில் இருக்கும் மிகப்பெரிய ராட்சஸ மீன் ஒன்றை வெளிவரச் செய்துவிடுகிறது.
இதன்பின், ராட்சஸ மீன் அவர்களை என்ன செய்தது? கடல் கொள்ளையன் உயிர்பிழைத்தானா? அந்த உருவம் என்னவானது? என்பது கலகலப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. மீன் அந்த உருவத்தை படாதபாடு படுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையிலும், ஒரு தங்கக் காசையாவது காப்பாற்றிவிட வேண்டும் எனப் போராடும் மனிதனின் இயல்பு, தன் வேலையை விடுத்து மற்றதில் கவனம் செலுத்தி சிக்கிக்கொண்டு அல்லல்படும் அந்த உருவம், இறுதியில் தனக்கு கிடைத்த ஒரு காசை வைத்துக்கொண்டு பானம் வாங்கும் கொள்ளையன் பசிக் கிறக்கத்திலும் இன்னொருவரை ஏமாற்றுவது போன்ற மனித வாழ்க்கையின் அன்றாட நிகழ்வை வேறொரு களத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். படத்தின் டைட்டில் கார்டில் கடல் கொள்ளையனும், அந்த உருவமும் இசைக்கேற்ப நடனமாடுவது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. பல குறும்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ள இந்தக் குறும்படம், அதிகப்படியான முறை சிறந்த திரைக்கதை விருதை பெற்றுள்ளது.