மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை:‘அம்மா எந்த ரூம்ல இருக்காங்க?’ - இரண்டாவது தளத்துக்கு திடீர் தடை!

டிஜிட்டல் திண்ணை:‘அம்மா எந்த ரூம்ல இருக்காங்க?’ - இரண்டாவது தளத்துக்கு திடீர் தடை!

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் போஸ்ட் செய்திருந்த ஸ்டேட்டஸ்க்கு லைக்ஸ் குவிந்தபடி இருந்தது.

“முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆனதிலிருந்து தினம் ஒரு பிரஸ் ரிலீஸ் வரும். அப்பல்லோ மருத்துவமனை தரப்பிலிருந்து அந்த செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருக்கும். அட்மிட் ஆன சமயத்தில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சொன்னார்கள். அடுத்தடுத்து வந்த அறிக்கையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்கிறார் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். பிறகுதான், லண்டன் மருத்துவர் வந்தார். எய்ம்ஸ் மருத்துவர் வந்தார். எல்லா தகவல்களையும் மருத்துவமனை வெளியிட்டது. கடைசியாக, முதல்வருக்கு பேசிவ் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது வரை அப்பல்லோ செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த சில தினங்களாக அப்பல்லோ தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. முதல்வருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது? எப்படி இருக்கிறார்? என்று சொல்லாமல் மருத்துவமனை மௌனமாகிவிட்டது.

இந்த நிலையில்தான் இன்று அப்பல்லோவுக்குப் போனார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். காலையிலேயே தம்பிதுரையும், ஓ.பன்னீர்செல்வமும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். வழக்கம்போல, அப்பல்லோ நிர்வாக அதிகாரி ஒருவர்தான் இளங்கோவனை உள்ளே அழைத்துப் போனார். முதல் தளத்தில் ரிசப்சனுக்கு அருகே ஒரு ரூம் இருக்கிறது. அந்த அறைக்கு அழைத்துச் சென்று இளங்கோவனை அமர வைத்தார்கள். மருத்துவர்கள் இருவர் அந்த அறைக்குள் சென்று முதல்வரின் உடல்நிலை பற்றி இளங்கோவனிடம் பேசினார்கள். மருத்துவர்கள் அந்த அறைக்குள் இருந்தபோதே தம்பிதுரையும், பன்னீர்செல்வமும் உள்ளே போனார்களாம். அவர்கள் இருவரும் இளங்கோவனிடம் சற்றுநேரம் பேசியிருக்கிறார்கள். ‘அம்மா நல்லா இருக்காங்க. இப்போ உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுக்கிட்டு இருக்கு. லண்டன் மருத்துவரும், எய்ம்ஸ் டாக்டர்களும் அம்மாவை கவனிச்சுட்டு இருக்காங்க…’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ‘நான் அவங்களைப் பார்க்க முடியாதா?’ என்று இளங்கோவன் கேட்டிருக்கிறார். ‘இன்பெக்‌ஷன் ஆகும் என்பதால்தான் யாரையும் அனுமதிக்கவில்லை, சாரி சார்’ என்று சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு வெளியேவந்த இளங்கோவன், ‘முதல்வரின் உடல்நிலை பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும்’ என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அவர் போனபிறகு, புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கம் மருத்துவமனைக்கு வந்தார். அவரையும் தம்பிதுரையும் பன்னீர்செல்வமும்தான் பார்த்தார்கள். வழக்கமாக சொல்லும் தகவலைத்தான் வைத்தியலிங்கத்திடமும் சொன்னார்கள். வைத்தியலிங்கமும் அதே தகவலைத்தான் வெளியே வந்து சொல்லிவிட்டுப் போனார்.

தம்பிதுரையும், பன்னீர்செல்வமும்கூட இன்று இரண்டாவது தளத்துக்குச் செல்லவில்லை. கடந்த சில தினங்களாக அப்பல்லோவில் இன்னொரு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரண்டாவது தளத்துக்குச் செல்லும் லிப்ட் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும், மருத்துவர்கள் மூன்று பேருக்கும் மட்டுமே இரண்டாவது தளத்தில் லிப்டை நிறுத்தும் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி அட்டையைப் பயன்படுத்தினால் மட்டுமே இரண்டாவது தளத்தில் லிப்ட் நிற்கும். இல்லை என்றால் முதல் தளம் அடுத்து மூன்றாவது தளம்தான் நிற்கும்படி மாற்றியிருக்கிறார்கள். அதனால் பன்னீர்செல்வமும் தம்பிதுரையும்கூட தற்போது முதல் தளத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டார்கள். சசிகலா அனுமதி கொடுத்தால் மட்டுமே அவர்களே இரண்டாவது தளத்துக்குப் போக முடியும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், ‘ஏன் இப்படி திடீர் கட்டுப்பாடு?’ என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது. பதிலை ரிப்ளைசில் போட்டது ஃபேஸ்புக்.

“பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை ஆகிய மூவர் மட்டும் எப்போதும் இரண்டாவது தளத்தின் ரிசப்சன் வரை போய் வந்தார்கள். சில வி.ஐ.பி.கள் வரும்போது அவர்களையும் இரண்டாவது தளத்தின் ரிசப்சன் வரை அழைத்துவந்து பேசி அனுப்பினார்கள். ஆனால் இரண்டாவது தளத்துக்கு வரும் எல்லோருமே கேட்கும் இன்னொரு கேள்வி, ‘அம்மா எந்த ரூம்ல இருக்காங்க?’ என்பதுதான். அதற்கு பதில்சொல்ல முடியாமல் அமைச்சர்கள் தவிக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்த சசிகலாதான், ‘இனி யாரும் இரண்டாவது தளத்துக்கு அனுமதிக்க வேண்டாம்’ என சொல்லிவிட்டாராம். முதல் தளத்தில் ஒரு அறையை தயார் செய்திருக்கிறார்கள். மருத்துவமனைக்கு வரும் வி.ஐ.பி-கள் எல்லோரையும் அந்த அறையில்தான் இனி உட்காரவைத்துப் பேச வேண்டும் என்பது உத்தரவாம். அதனால் எல்லோருமே முதல் தளத்தில் காத்திருக்கிறார்கள்.” என்பதுதான் அந்த பதில்.

ஆஃப்லைனில் போவதற்குமுன்பு, “கடந்த வாரத்தில் சசிகலா, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்கிறார் என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. இன்று சென்னை முழுக்க அவரது படத்துக்கு கொம்பு வைத்துப் போட்டு, ‘எங்கள் கட்சியைக் காப்பாற்ற எங்களுக்குத் தெரியும். உன் நாவை அடக்கு…. இல்லை என்றால்?’ என எச்சரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. யார் தயாரித்த போஸ்டர் இது என்பது தெரியவில்லை. டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பாவுக்கு இந்தத் தகவல் போயிருக்கிறது. ‘இது யாரு செஞ்ச வேலைன்னு எனக்குத் தெரியும். மறுபடியும் ஒரு பிரஸ் மீட் வைக்கிறேன்’ என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார் அவர். புஷ்பா புயல் மீண்டும் கிளம்பப் போகிறது!”

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon