மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ஓ.பன்னீருக்கு கி.வீரமணி வாழ்த்து!

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், அவரது பொறுப்புகளை ஏற்றிருக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் (2016) 22ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சில நாள்களுக்கு முன்புவரை வெளிவந்த தகவல்களும், மருத்துவ அறிவிப்புகளும் விரைவில் இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார் என்று கூறின. ஆனால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட மருத்துவக் குறிப்பு அறிக்கையில் மேலும் சில நாள்கள் தங்கி சிகிச்சை பெறவேண்டியிருக்கும்; சிகிச்சை பலன் அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 19 நாள்களாக தமிழ்நாட்டு அரசின் சார்பாக சந்திக்கும் சிக்கலான பிரச்னைகள் ஏராளம் உள்ளன. காவிரி நீர் பங்கீட்டு வழக்கு முதல் காவிரி மேலாண்மை வாரியம் நிர்ணயம்; புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு போன்ற பல்வேறு நிலைகளில் முதல்வர் முன்னின்று எடுக்கவேண்டிய தீர்வுகள்பற்றி ஒருவித தேக்கநிலையே இருந்தது. கர்நாடகத்தில் பலமுறை அனைத்துக் கட்சி கூட்டங்கள் கூட்டி தங்களது முடிவு, ஒட்டுமொத்தமான மாநில மக்கள் அனைவரது முடிவு என்று மத்திய அரசுக்குக் காட்டி அரசியல் அழுத்தம்தரும் வேளையில், தமிழ்நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகள், விவசாய அமைப்புகள், சமூக நல அமைப்புகள் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பியும் பதில் இல்லை. இந்த தேக்கநிலை மாற்றப்பட்டு, முதல்வர் குணமடைந்து மீண்டும் தமது பணியைச் செய்ய தகுதிபெறும்வரையில் அவரது துறைகளின் பொறுப்பை, அவரது சகாக்களிடம் பிரித்தளித்து, அரசு சக்கரம் வழக்கம்போல் சிக்கல் ஏதுமின்றி சுழலவேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றுமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கை அரசியல் சட்டரீதியாக சரியானதாகும். தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொறுப்பு ஆளுநர் திரு.வித்யாசாகர் ராவ் ஆவார்கள். நேற்று முதல்வர் ஜெயலலிதா அவர்களது துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே கவனிப்பார்; அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என்று திட்டவட்டமாக அறிவிப்புக் கொடுத்தது மிகவும் வரவேற்கத்தக்க சரியான முடிவு - அறிவிப்பு ஆகும். பொதுவாக, அரசு இயந்திரத்தின் அச்சாணி தலைமைச் செயலாளர்தான். அவர்தான் அரசு சார்பில் எதற்கும் பொறுப்பேற்று பதில் கூற வேண்டியவர்.

அவரும் சுறுசுறுப்புடன் இயங்குவது பாராட்டத்தக்கது. இந்திய அரசமைப்புச் சட்ட விதி 166 ஆவது பிரிவின்படி, இதுதான் சரியான நிலைப்பாடு. அப்படி நேற்று வெளிவந்த ஆளுநரின் அறிக்கையில், ‘‘இந்த ஏற்பாடு அனைத்தும் முதலமைச்சரின் அறிவுரையின்பேரில் செய்யப்பட்டுள்ளது’’ என்ற வாசகங்கள் அரசாங்க செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ளதுதான் சற்று நெருடலாகவும், விமர்சனங்களுக்கு இடமளிப்பதாகவும் உள்ளது என்பதைத்தவிர, மற்றபடி அரசமைப்புச் சட்டப்படியான கடமைகளே இவை. இதற்கிடையில், அரசியல் புரோக்கர் ஒருவர், தானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆட்சி ஏற்படுத்த வேண்டுமென்று குட்டையைக் குழப்பி, அரசியல் தூண்டிலைத் தூக்கி வந்தவர் நன்கு மூக்குடைபட்டுள்ளார். போதிய பெரும்பான்மையுடன் உள்ள ஆளும் கட்சி, பலமான எதிர்க்கட்சியும், எல்லோரும் இந்த நேரத்தில் ஒரே குரலில் இம்முடிவை வரவேற்றுள்ளது பாராட்டத்தக்கது. நமது முதலமைச்சர் விரைவில் முழுநலம் பெற்று பணிக்குத் திரும்ப வேண்டும். தலைவர்களின் உடல்நலம் என்பது மக்களின் ஆவல் கொண்டது என்றாலும், தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பக் கூடாது” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon