மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 அக் 2016

பன்னீர், ஸ்டாலின் சந்திப்பு: திருமா கருத்து!

பன்னீர், ஸ்டாலின் சந்திப்பு:  திருமா கருத்து!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இன்று ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலில் தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பன்னீரை, திமுக பொருளாளர் ஸ்டாலின் சந்தித்ததை வரவேற்றுள்ளார்.

கேள்வி: நீங்கள் திடீரென டெல்லி சென்றது ஏன்?

பதில்: மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அத்வாலே ஆகியோரை சந்திப்பதற்கு டெல்லிக்குச் சென்று வந்தேன். தேசிய தலித் முன்னணி என்னும் அமைப்பின் சிறப்புக் கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்துவதுபற்றி பேசுவதற்காக சென்றேன். நான் அந்த அமைப்பின் துணைத் தலைவராக இருந்து வருகிறேன். இந்த அமைப்பு, கட்சிகளைக் கடந்து தேசிய அளவில் தலித் மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்காக உருவாக்கப்பட்டது.

முதல் கலந்தாய்வுக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். ஏற்கனவே, 2 கூட்டங்கள் டெல்லியில் நடந்துள்ளன. ஒரு கூட்டம் மும்பையில் நடந்தது. தற்போது, நவம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேசிய அளவில் தலித் இயக்கத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

கேள்வி: நீங்கள் பாஜக அணியின் பக்கம் சாய முயல்வதாகச் சொல்லப்படுகிறதே?

பதில் : அப்பல்லோவுக்குப் போனால் அதிமுக அணிக்கு தாவப் போகிறீர்களா? என்கின்றனர். டெல்லிக்குப் போனால் பாஜக பக்கம் தாவப் போகிறீர்களா? என்கிறீர்கள். தேர்தல் அரசியலைத் தாண்டி சிந்திக்க முடியாதவர்கள்தான் இப்படி விமர்சிக்கின்றனர்.

கேள்வி: இல.கணேசனை டெல்லியில் சந்தித்ததாகச் சொல்கிறார்களே?

பதில் : டெல்லி விமான நிலையத்தில் யதேச்சையாக சந்தித்தோம். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று சென்னைக்குத் திரும்பினார். அதே விமானத்தில் நானும் பயணித்தேன். அப்போது அவருக்கு வாழ்த்துக் கூறினேன். இதில் என்ன அரசியல் இருக்க முடியும்.

கேள்வி: திமுக சார்பில் நடந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்துக்கு உங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லையா?

பதில்: எங்கள் கட்சியிலும் விவசாய அணி உள்ளது. ஏனோ எங்களுக்கு அழைப்பு இல்லை. எங்களை அழைக்காததால் திமுக எடுத்த முயற்சியை நாங்கள் எதிராகப் பார்க்கவில்லை. 17, 18ஆம் தேதிகளில் நடக்கும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு திமுக தலைவர் கலைஞர் ஆதரவு தெரிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

கேள்வி : மக்கள் நலக் கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருக்கிறார்களே?

பதில் : அதில் ஏதும் உள்நோக்கம் இருப்பதாக நான் கருதவில்லை. டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகளின் விவசாய சங்கம் தீவிரமாக இருப்பதால் அவர்களை மட்டும் அழைத்தால் போதும் எனக் கருதி இருக்கலாம். மக்கள் நலக் கூட்டணியில் இதனால் எந்தக் குழப்பமும் நேராது.

கேள்வி : உங்களுக்கு அழைப்பு வந்திருந்தால் பங்கேற்று இருப்பீர்களா?

பதில் :காவிரி நீர்ப் பிரச்னை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்னை. அழைப்பு விடுத்திருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல; மதிமுக-வும் கலந்துகொண்டிருக்கும்.

கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் - மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில் : இதை வரவேற்கிறேன். இந்த அரசியல் அணுகுமுறை மேலும்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்கள் நலன்களுக்காக சந்தித்துக் கொள்வது சிறந்த அரசியல் நாகரிகமாகும். இவ்வாறு அவர் பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்தார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon