மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் அதிகரிப்பு!

மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் அதிகரிப்பு!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 1௦௦ எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பதற்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த கல்வி ஆண்டு வரை, 155 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதையடுத்து, வரும் 2௦17ஆம் கல்வி ஆண்டு முதல் 100 எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சி செய்து வந்தது. தற்போது, எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பதற்காக மத்திய அரசும் ஒப்புதலளிக்கத் தயாராக இருந்தது. இந்நிலையில், கூடுதலாக 100 இடங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்ய, இந்திய மருத்துவக் கவுன்சில் குழு மதுரை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடப்பு கல்வியாண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார். ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவக் கல்லூரி ஆய்வுக்காக இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2௦16ஆம் கல்வியாண்டில் 155 இடங்களில் 5 இடங்கள் குறைக்கப்பட்டு 150 இடங்களுக்கே மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எனினும் 100 இடங்களை அதிகரிப்பதற்கான முயற்சியை மதுரை மருத்துவமனை நிர்வாகம் கைவிடவில்லை.

தற்போது மத்திய அரசு வரும் 2௦17ஆம் கல்வியாண்டு முதல் 100 எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க முதற்கட்டமாக ரூ. 7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகையில் மதுரை அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. அதிகமான அறுவை சிகிச்சைகள், உயிர்காக்கும் சிகிச்சைகள் இங்கு அதிகளவில் நடக்கின்றன. 250 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இருக்கிறது. இதை உறுதிசெய்ய இந்திய மருத்துவக் கவுன்சில் விரைவில் ஆய்வு நடத்த வரவுள்ளது. தற்போது கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், அடுத்த கல்வி ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

தற்போது வரை, தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயி‌ரத்து 65‌5 எம்.பி.பி.எஸ். இடங்கள்‌ உள்ளன. மேலும் 1௦௦ இடங்கள் அதிகரிப்பது மருத்துவ மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon