சென்னை மறைமலை நகர் அருகே கார் ஒன்று சாலை தடுப்புச் சுவரின்மீது மோதி விபத்துக்குள்ளானதில், வட மாநிலத்தைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் உள்பட சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஷர்மா சிங் (19), சுமம் சிங் (18), நீல்முண்டா (19), இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த நிலு (19) மற்றும் சித்தர் சிங் (19) ஆகியோர் படித்து வந்தனர். இவர்கள் 5 பேரும், பெங்களூரில் பணியாற்றி வந்த சிவாங்கி என்ற பெண்ணும் காரில் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் கார் மறைமலைநகரில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரில் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சர்மா சிங், சுமம் சிங், நீல்முண்டா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று காயமடைந்த நிலு, சித்தர் சிங் மற்றும் சிவாங்கி ஆகியோரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மாணவர்களில் பெரும்பாலானோர் வட மற்றும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களை கட்டுப்படுத்தும் ஒழுங்கு விதிகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்று பல்கலைக்கழகத்தைச் சுற்றி வாழும் பொதுமக்கள் கூறினர்.