மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

திமுக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்:பாஜக!

திமுக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்:பாஜக!

‘காவிரிப் பிரச்னையில் திமுக-வும் காங்கிரஸும் அரசியல் செய்து வருகின்றன. அதற்காக திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினால் அதில் பாஜக பங்கேற்காது’ என்று பேசி, அதிரடி கிளப்பியிருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

காவிரியில் தண்ணீர் வேண்டியும் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தனியாகவும் விவசாயிகளுடன் இணைந்தும் பல்வேறு கட்ட போராட்டம், ஆர்ப்பாட்டங்களை திமுக நடத்திவருகிறது.

சமீபத்தில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இப்படி தொடர்ச்சியான செயல்பாடுகளால் காவிரிப் பிரச்னையை திமுக அணுகி வருகிறது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காவிரிப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி காவிரி நீரைப் பெற்றுத்தந்தார். அதனால் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் காவிரிப் பிரச்னையை அணுக முடியும். தமிழகத்துக்கு நீதி கிடைக்க மத்திய அரசு துணை நிற்கும். இது, தமிழக அரசு கவனிக்க வேண்டிய பிரச்னை. இதில் திமுக என்ன செய்ய முடியும்? என கேள்வியெழுப்பியுள்ள தமிழிசை, திமுக-வும், காங்கிரஸும் இப்பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

கூடவே, அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டினால் பாஜக அதில் கலந்துகொள்ளும். ஆனால் திமுக கூட்டினால் பாஜக பங்கேற்காது! என்றும் சொல்லியிருக்கிறார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon