மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

கோவா யாருக்கு?

கோவா யாருக்கு?

கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பால், பாகிஸ்தான் கைப்பற்றியிருக்கும் காஷ்மீரில் நடந்த இந்திய இராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள், வாக்காளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக, பிரம்மாண்டமாக வெற்றிபெறும் என்று ‘தி இந்தியா டுடே - ஆக்கிஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா மாநில சட்டசபையில், 17 -21 சீட்கள் பெற்று பாஜக வெற்றிபெறும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆட்சி எதிர்ப்பு இல்லை

கோவாவில், பாஜக-வுக்கு எதிராக ஆட்சி எதிர்ப்பு எதுவும் இல்லை. தற்போதும்கூட, 38 சதவிகித வாக்குபலம் அக்கட்சிக்கு இருப்பதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. சமீபத்தில், மாநில ஆர்.எஸ்.எஸ். குழுமத்துடன் நடந்த சிறு சச்சரவு, தற்போதைய லக்ஷ்மிகாந்த் பர்சேகர் அரசின்மீது பெரும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. பர்சேகர் அரசின் செயல்பாடு குறித்து கேட்டபோது, 76 சதவிகித மக்கள் ‘நன்று’ எனவும், நான்கு சதவிகித மக்கள் ‘மிக நன்று’ எனவும், பதினெட்டு சதவிகித மக்கள் ‘மோசம்’ எனவும் தேர்வு செய்திருக்கின்றனர்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 13-17 சீட்கள் வென்று, இரண்டாம் இடத்துக்கு வரும் எனத் தெரிகிறது. கோவாவின் மூன்றாம் முக்கிய கட்சியாக மாறியிருக்கும் ஆம் ஆத்மி, 1-3 சீட்கள் மட்டுமே பெற்று ஏமாற்றத்தை சந்திக்கவிருக்கிறது. மகாராஷ்டிரவாண்டி கோமந்தக் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுபாஷ் வெலிங்கரின் கோவா சுரக்ஷா மஞ்ச், 3-5 சீட்களில் வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனோகர் பரிக்கர் எனும் காரணி

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற மனோகர் பரிக்கர் தில்லி சென்றபிறகு, பாஜக அரசு அதன் பரவலான ஆதரவை இழந்துவிட்டதா எனக் கேட்டபோது, 29 சதவிகிதம் பேர் ‘ஆம்’ எனவும், 37 சதவிகிதம் பேர் அது ஒரு பிரச்னை இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். பாதுகாப்புத் துறையின் நிர்வாகம் மட்டும் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், தில்லிக்கு வந்திருக்க மாட்டேன் என மிகச் சமீபத்தில் தெரிவித்த மனோகர் பரிக்கர், 19 சதவிகித மக்களின் முதலமைச்சர் தேர்வாகவும் இருக்கிறார். பர்சேகரை 31 சதவிகித மக்கள் தேர்வு செய்திருக்கின்றனர். திகம்பர் கமாத்தை 14 சதவிகித மக்களும், சுபாஷ் வெலிங்கரை 4 சதவிகித மக்களும் தேர்வு செய்திருக்கின்றனர்.

தேர்தல் சிக்கல்கள்

கோவாவின் வாக்காளர்களுக்கு மிகப்பெரும் பிரச்னைகள் பணவீக்கம் என 43 சதவிகித மக்களும் வேலைவாய்ப்பு என 28 சதவிகித மக்களும், ஊழல் என 19 சதவிகித மக்களும் தெரிவித்திருக்கின்றனர்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon