மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: ஸ்டாலின் கண்டனம்!

காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: ஸ்டாலின் கண்டனம்!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 11 வயதுச் சிறுமியும் உயிரிழந்தார். இதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம காய்ச்சலால் 12 குழந்தைகள் இறந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் தொடர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், இதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் காலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்திருக்கிறது. அடுத்து பொழிச்சலூரைச் சேர்ந்த சிறுவன் முகமதுவும், அவரது சகோதரியும் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் சிறுவன் முகமது, மாலை ஆறு மணியளவில் உயிரிழந்திருக்கிறார். அந்தச் சிறுவனின் சகோதரி உடல் நலம் தேறிவருவதாக முதலில் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அந்தச் சிறுமியும் இரவு எட்டு மணிக்கு உயிரிழந்திருக்கிறாள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினரை சோகத்தில் மூழ்க வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அதே மருத்துமனையில் சிகிச்சைக்காக வந்திருக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்பிறகு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதுரவாயலைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி லட்சிகா ஏஞ்சல், இரவு ஒன்றரை மணியளவில் உயிரிழந்திருக்கிறார். இப்படி நேற்று காலையில் தொடங்கி நள்ளிரவுக்குள் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன.

குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு நிற்கும் பெற்றோருக்கு இந்த துயரம் எள் முனையளவுகூட ஈடு கட்ட முடியாதது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியப்போக்கும், காய்ச்சலை உரிய காலத்துக்குள் கண்டுபிடித்து முறையான சிகிச்சை அளிக்காததும் காரணம் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவேண்டிய அரசு மருத்துமனையில் புரையோடிப்போயிருக்கும் இந்த அலட்சிய மனப்பான்மைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொடிய காய்ச்சல்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது.

அரசு மருத்துமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு கவனமாக சிகிச்சை அளிக்காத காரணத்தால், இப்போது எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆகவே, சென்னை மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். சென்னை மாநகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளை களைந்து, இது போன்ற நோய்கள் வராமல் தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய தரமான சிகிச்சை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon