மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

எப்போதும் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

எப்போதும் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

வயதாவதை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரத்தில், குறைந்த வயதில் வயது அதிகமாகத் தெரிவதை தடுக்க சில வழிகளைச் சொல்கிறார்கள் ’ஆன்ட்டி ஏஜிங்’ மருத்துவர்கள்.

இட்லி, தோசை போன்ற கார்போ உணவுகளை அதிகம் சாப்பிடும்போது எளிதில் திருப்தியான உணர்வே ஏற்படாது. சாப்பிட்டபிறகு ‘போதும்’ என்ற உணர்வையளிக்க லெப்டின் என்னும் ஹார்மோன் சுரக்கும். அதிகம் சாப்பிடுபவர்களுக்கு லெப்டின் அதிகமாகச் சுரந்து தனது வேலையை சரியாகச் செய்யாது. கார்போ உணவுகளைக் குறைத்துவிட்டு நவதானிய பருப்புகள், பச்சைக் கீரைகள், காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே’ என அதிகம் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இதனால் எளிதில் உடல் பருமன் ஆகத் தொடங்கும். அதனால் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு சரியான உடற்பயிற்சிகளைச் செய்தால் பருமன் ஏற்படாமல் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பருமன் ஏற்படும்போது சிலருக்கு நிறம் வெளிறக்கூடும். இது, உண்மையான நிறம் அல்ல. இதை அழகு என எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் எடையைக் குறைத்தபிறகு வரும் நிறமே இயற்கையானது.

மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவைகூட வயதை முதிர்ச்சியாகக் காட்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளான யோகா, தியானம், நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதோடு முறையான வாழ்க்கைமுறையை மேற்கொள்வது அவசியம். இளம் வயதிலேயே சிலருக்கு முதுமை தோற்றம் வர ஆரம்பிக்கும். அதற்குரிய சிகிச்சைகளான சரும சுருக்கங்கள் நீக்குதல், பருமன் குறைத்தல், முகப்பொலிவை அதிகமாக்குதல் ஆகியவற்றைச் செய்து இளமையோடு கொண்டு வர முடியும்.

முகப்பொலிவை ஏற்படுத்தும் சிறந்த கிரீம்களை சருமநல மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், முகச் சுருக்கங்கள் மறைய நவீன லேசர் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சைக்கு ‘லேசர் ஃபேஸ் லிஃப்ட்’ என்று பெயர். வயதான தோற்றத்தில் முகம் தெரிவதை இதன்மூலம் மாற்றலாம். இதுவும் சரியான சருமநல நிபுணரிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். பியூட்டி பார்லர்களில் இதை செய்துகொள்ளக் கூடாது.

போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரவில் சுரக்கும் ஹார்மோனான மெலட்டோனின் சுரப்பது பாதிக்கப்படுகிறது. மெலட்டோனின் ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட். மெலட்டோனின் அளவு குறையும்போது செல்களில் பாதிப்பு அதிகமாகி, இளம் வயதிலேயே வயதை அதிகப்படுத்திக் காட்டும். இந்த ஹார்மோன் சரியான அளவில் இருந்தால் உணர்வூக்கியாகச் செயல்பட்டு மனச்சோர்வு வராமல் செய்யும். எனவே, எட்டுமணி நேரத் தூக்கம் முக்கியம். வைட்டமின் சி, தயமின், சைனோகோபாலமின் போன்ற சத்துகள் குறைவாக இருந்தாலும் தோற்றப்பொலிவை குறைக்கும். சமச்சீரான சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தால்தான் செல்கள் உயிப்புடன் இருக்கும். சருமமும் பொலிவுடன் காணப்படும். வயதை குறைத்துக்காட்ட பல சிகிச்சைகள் இருந்தாலும், தனிப்பட்ட ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இளமையை தக்கவைக்க முடியும். சரிவிகித உணவுப்பழக்கம், போதுமான தூக்கம், மது, சிகரெட் பழக்கமின்மை, முறையான உடற்பயிற்சி போன்ற விஷயங்களை கடைப்பிடிப்பது அவசியம்.

விஜய் மகேந்திரன்

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon