மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

வாரணாசி: கூட்ட நெரிசலில் பக்தர்கள் மரணம்!

வாரணாசி: கூட்ட நெரிசலில் பக்தர்கள் மரணம்!

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜெய் குருதேவ் ஆசிரமம் சார்பாக, வாரணாசியில் இருந்து சந்தேவ்லி வரை நடைபெற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜெய் குருதேவ் ஆசிரமம் சார்பாக, வாரணாசியில் இருந்து சந்தேவ்லி வரை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ராஜ்காட் மேம்பாலத்தின் மீது நெருக்கடியான இடத்தில் அளவுக்கு அதிகமானோர் போட்டி போட்டுக்கொண்டு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், சிலர் உயிருக்கு ஆபத்தானநிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.5௦ ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, கடந்த 1௦ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தலைமையில் நடைபெற்ற பேரணியில் மூன்றுபேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே மாதத்தில் 22 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon