மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

மல்லையா விமானத்தை விற்க கெடு!

மல்லையா விமானத்தை விற்க கெடு!

தொழிலதிபர் விஜய் மல்லையா கடனாகப் பெற்ற தொகையை வசூலிக்க, அவரது சொகுசு விமானத்தை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் ஏலத்தில் விற்பனை செய்யவேண்டும் என்று சேவை வரித் துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிங்ஃபிஷர் அதிபர் விஜய் மல்லையா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இந்தியாவின் 17 பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9,000 கோடி கடனாகப் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து சென்றுவிட்டார். எனவே, அவரது இந்திய சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அவரது சொகுசு விமானத்தை ஏலத்தில் விற்கும் முயற்சிகள் போதிய தொகைக்கு கேட்கப்படாததால் தோல்வியடைந்தன.

இந்நிலையில், இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் கோலபவலா முந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள், ‘‘மல்லையாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த விமானம் நீண்டகாலமாக விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக விற்பனை செய்து அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த விமானத்தை விற்பது தொடர்பான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் வருகிற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

மல்லையாவின் இந்த ஏர்பஸ் 319 சொகுசு விமானத்தில் 25 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் (பைலட் உட்பட) பயணிக்கும் திறனுடையது. இதில் கான்ஃபெரன்ஸ் ஹால், மீட்டிங் ரூம், கழிப்பறையுடன் கூடிய பெட்ரூம் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon