மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: அம்மாவை அரவணைப்பது யார்?

சிறப்புக் கட்டுரை: அம்மாவை அரவணைப்பது யார்?

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அவன் நோயுற்று இருக்கும் காலத்தில்தான் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்துப் பார்க்கப்படுகிறது. அப்படி அசைத்துப் பார்க்கப்படும் நம்பிக்கை மனதிலிருந்து உதிர்ந்து விட்டால், நோயின் தீவிரம் அதிகமாகிறது. ஆனால், மனதுக்குள் தேங்கியிருக்கும் நம்பிக்கையை ஒரு துளிகூட சிந்தவிடாமல் பார்த்துக்கொள்வது நோயுற்று இருப்பவரின் அருகில் தூண்போல காத்து நிற்கும் உறவுகள்தான்.

குறிப்பாக, ஒரு சிறு குழந்தை காய்ச்சலால் அவதிப்படும்போது, அதன் அருகில் அமர்ந்து பாசத்துடன் தலைகோதும் தாயின் விரல்களோ, தந்தையின் அரவணைப்போ அக்குழந்தையின் பிணியை மிக விரைவில் தீர்த்துவிடும். அது, ‘என்னைப் பார்த்துக்கொள்ள என் அம்மாவும் அப்பாவும் அருகிலேயே இருக்கிறார்கள்’ என்கிற பாதுகாப்பு உணர்வு தருகிற நம்பிக்கையினால் ஏற்படும் விளைவு.‘இது உண்மை’ என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ‘நோயுற்று இருக்கும் காலகட்டத்தில், ஒருவருக்குக் கிடைக்கும் அன்பும் நம்பிக்கையும் ஆதரவும் அவரை நோயிலிருந்து சீக்கிரம் மீள உதவி செய்யும்; அது மருந்து மாத்திரைகளை விட அற்புதமான சிகிச்சை’ என்கிறது மனநல மருத்துவம். இந்த நம்பிக்கையையும் அன்பையும் ஆதரவையும் தருவதற்குத்தான் குடும்பம் என்கிற அமைப்பு நிறுவப்பட்டதோ?

மருத்துவமனையின் ஐசியூ வார்டில் ஒரு நோயாளியின் அட்டெண்டராக ஓரிரு நாட்கள் இருந்தால்கூட வாழ்க்கையின் இன்னொரு பக்கம் எளிதாக புரிந்துவிடும். அப்போது பணம், பொருள்,பதவி, ஆடம்பரம் வாழ்க்கை அல்ல; எந்த நோயும் உடம்புக்கு வராமல் இருந்தாலே அதுதான் பெரும் செல்வம் என்ற உண்மை புரியவரும். ஐசியூ வார்டின் முன்பு காத்திருக்கும் நிமிடங்களில்தான் வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும். அங்கு காத்திருக்கும் அறையில் அழுகின்ற அம்மாக்களின் கண்ணீர் உயிரைக் கரைத்துவிடும். அப்பாக்களின் சோகம் தீராத வலியைத் தரும். ஐசியூ-வில் இருக்கும் கணவரை நினைத்து நினைத்து கதறும் மனைவியின் துக்கம் வார்த்தைகளில் வடிக்க இயலா பெரும் துன்பத்தைத் தரும். மகன், மகள் போன்றவர்களின் கண்களில் படிந்திருக்கும் பயமும் கவலையும் உயிரை அறுக்கும். ஆனால், சோகமே வடிவமாக காத்திருக்கும் அறையில் உட்கார்ந்திருக்கும் உறவுகள், ஐசியூ-வில் இருந்து இரு நர்ஸோ, மருத்துவரோ அழைக்கிறார்கள் என்றால், அத்தனை நம்பிக்கையுடன் ஓடுவார்கள். அப்படி நம்பிக்கையுடன் ஓடும் அவர்களிடம் நர்ஸும் டாக்டரும் கையில் ஒரு அட்டையை வைத்துக்கொண்டு, ‘உங்கள் கணவரின் நிலை இப்படி உள்ளது. இந்த ஊசியைப் போட்டால் அவர் உயிர் பிழைக்கவோ அல்லது முழுமையாக குணமடையவோ வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த ஊசியைப் போட வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்; கையெழுத்துப் போட வேண்டும்’ என்று சொல்லி நாலைந்து பக்கங்கள் கொண்ட வெள்ளைத்தாள்களை நீட்டுவார்கள். அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை பெரும்பாலானவர்கள் முழுமையாக படித்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால், மருத்துவரின் வார்த்தைகளின் மேல் உள்ள நம்பிக்கையில் என் கணவர்/மகன்/மகள் பிழைத்து வருவார்/ள் என்ற அதீத நம்பிக்கையில் அதில் கையெழுத்துப் போடுவார்கள். இந்தக் காட்சியை மருத்துவமனையில் நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்போம். ஆம், இப்போது மூன்று வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு யார் இந்த கையெழுத்தைப் போடுகிறார்கள்?

குடும்பம் என்ற அமைப்பு இல்லாமல், ரத்த உறவுகள் இல்லாமல் தனி மனுஷியாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் பேல்,எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் என உலகத் தரம் வாய்ந்த மருத்துவமும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. ஆனால், ‘இந்த மருந்தை கொடுக்கலாம், இந்த ஊசியைப் போட்டால் நல்லது என்கிற முடிவை மருத்துவக்குழு எடுக்கும்போது, அதற்கு சரி என்கிற ஒப்புதலையும் அதற்கான கையெழுத்தையும் யார் போடுகிறார்கள்’ என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.‘Rendezvous with Simi Garewal’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜெயலலிதாவிடம் தொகுப்பாளர் சிமி, யாரும் கேட்காத, கேட்கத் தயங்கும் கேள்விகளைக் கேட்டார். அதில் ஒரு கேள்வி இது.

‘திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு யாரையாவது சந்தித்திருக்கிறீர்களா? இவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது தோன்றி இருக்கிறதா?’ என்று அலட்டிக்கொள்ளாமல் கேட்டார் சிமி. அதற்கு எந்த உணர்வுகளையும் முகத்தில் காண்பித்துக் கொள்ளாமல் ஜெ. இப்படி ஒரு பதிலை சொன்னார். ‘இல்லை. அப்படி யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக்கிறேன். என்னுடைய பதினெட்டு வயதில், என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால், அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன். வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன். ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே’ என்று பதில் அளித்திருப்பார்.

//குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன்//- ஒருவேளை ஜெ. சொன்னதைப் போல அவருக்கு குடும்பம், குழந்தைகள் இருந்திருந்தால், இன்று அப்பல்லோவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, அவரது உடன் நலன் சார்ந்த முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்கிற செய்தி, அவர் பூரண நலன் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று காத்திருக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும். இன்று ஜெ. சிகிச்சை பெற்று வருவது போல, எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருடன் ஜானகி அம்மையார் இருந்தார். எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, சிறுநீரக தானம் கொடுத்து எம்.ஜி.ஆரைக் குணமடைய வைத்தது அவருடைய அண்ணன் சக்ரபாணியின் மகள் லீலாவதி. அண்ணா 1968இல் புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருடன் இருந்து அவரைப் பேணி பாதுகாத்தவர்கள் அண்ணாவின் மனைவி ராணி அம்மாவும் அவர்களுடைய வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளமும். இன்று ஜெயலலிதாவின் அருகில் யார் இருக்கிறார்கள், முக்கிய முடிவுகளில் அவர்களின் பங்கு என்ன என்பது பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது கூட, நோயை விரைவில் குணமாக்கும். ஜெ-வுக்காக அந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்று யாராவது சொல்வார்களா?

அதே பேட்டியில், சிமி ‘ஜெயாஜி! ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது?’ என்று கேட்டதற்கு, பதில் அளித்த ஜெ, ‘இல்லை. எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன். தோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகாதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்’ என்று பதில் அளித்திருப்பார். ஆனால், அனைத்தும் மாறுதலுக்குட்பட்டவை தானே? கடந்த சட்டமன்றத் தேர்தலின் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம், ‘எனக்கு என்று யார் இருக்கிறார்கள்? குடும்பம் இருக்கிறதா? குழந்தை இருக்கிறதா?’ என்று மேடையில் அமர்ந்து கொண்டு,கூட்டத்தைப் பார்த்துக் கேட்ட கேள்வியில், ஜெ-வின் மனதில் குடும்பம் இல்லாதது குறித்து ஏதோ ஒரு ஆதங்கமும் வருத்தமும் இருந்தது என்பதை இந்த தருணத்தில் ஜெயலலிதாவே ஒப்புக்கொள்வார். இவை அனைத்தையும் கடந்து அவர் மருத்துவமனையிலிருந்து எழுந்து வர வேண்டும் என்பதே அனைவரின் பெரு விருப்பம்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon