மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

கிண்டி விபத்து: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கிண்டி விபத்து: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கிண்டியில் தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே மூன்று மாணவிகள் இறந்த சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை கிண்டியில் மேம்பாலம் அருகே கடந்த வியாழக்கிழமையன்று செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் படிக்கும் சித்ரா, ஆஷா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் வீட்டுக்குத் திரும்புவதற்காகச் சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி, மாணவிகள் மீது மோதியது. நிகழ்விடத்திலேயே அம்மாணவிகள் இறந்தனர். காயமடைந்த மூன்று மாணவிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டனர். இந்த சம்பவம் செய்தித்தாள்களில் வெளிவந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘விபத்து குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர், டி.ஜி.பி. ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் லாரிகளால் நடந்த விபத்துகள் குறித்த தகவலையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மோட்டார் வாகன சட்டப்படி விபத்துகள், அதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் ஆகிய தகவல்களைக் கொடுக்க வேண்டும். மேலும், தண்ணீர் லாரிகளுக்கு தகுதிச்சான்று அளிப்பது குறித்த விதிமுறைகள், லாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட லோடுகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தவறு செய்யும் ஓட்டுநர்கள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமுறைகளை மீறி நடக்கும் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்வதை தமிழக அதிகாரிகள் சரியாக அமல்படுத்துவதில்லை. அதிகாரிகளின் கவனக்குறைவுதான் பொதுமக்கள் பலரின் உயிரை பலி வாங்குகிறது. அரசின் முதன்மை நோக்கமே மக்கள் பாதுகாப்பு. மக்களை தடுக்கப்படக்கூடிய விபத்துகளிலிருந்து காப்பாற்றுவது மாநில அரசின் கடமை’.

இவ்வாறு செய்திக்குறிப்பில் வெளியாகியிருந்தது. செல்லம்மாள் கல்லூரி, பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமானது. விபத்தில் பலியான மூன்று மாணவிகளின் குடும்பத்துக்குச் செல்லம்மாள் கல்லூரி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையிலிருந்து தலா ரூபாய் இரண்டு லட்சம் நிதியுதவி வழங்கினர்.

இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியம் விதிகளை மீறும் குடிநீர் லாரிகளின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விபத்து குறித்து குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில், நிர்வாக இயக்குநர் விக்ரம் கபூர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், குடிநீர் தொடர்பான ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடிநீர் லாரியில் டிரைவர் பணியில் சுழற்சி முறையில் ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். எதற்காகவும் லாரியை கிளீனர் ஓட்டக்கூடாது. இது மட்டுமல்லாமல் லாரியில் கண்டிப்பாக முதலுதவி பெட்டி இருக்க வேண்டும் ஆகிய உத்தரவுகள் ஆலோசனைக் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்டது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon