மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

கூடுதல் விலைக்கு குடிநீர்: அமைச்சர் எச்சரிக்கை!

கூடுதல் விலைக்கு குடிநீர்: அமைச்சர் எச்சரிக்கை!

‘தியேட்டர், ஓட்டல், விமான நிலையங்களில் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு பேக்கேஜ் குடிநீர் விற்கப்படுகிறது. இவ்வாறு செய்பவர்கள் மீது சிறை தண்டனை உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என பஸ்வான் எச்சரித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த உலக தர நிர்ணய நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:

“விமான நிலையங்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள் உட்பட பல்வேறு இடங்களிலும் பேக்கேஜ் குடிநீர், குளிர்பானங்கள் அவற்றில் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சில்லரை விலையை (எம்.ஆர்.பி) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. எம்.ஆர்.பி-யில் குறிப்பிட்டதை விட அதிக விலைக்கு விற்பது சட்டப்படி குற்றம். மேற்கண்ட இடங்களில் இவை எம்.ஆர்.பி-யை விட 10 முதல் 20 சதவிகிதம் வரை அதிகமாக விற்கப்படுகின்றன. இவ்வாறு விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இருக்கிறது. நுகர்வோர் இதுதொடர்பாக புகார் அளித்தால் அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அபராதம் அல்லது சிறை தண்டனை கூட விதிக்கலாம்.

பேக்கேஜ் குடிநீர் பாட்டில்களில் ஐ.எஸ்.ஐ. தர முத்திரை இருப்பது அவசியம். நுகர்வோர் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு இதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தியேட்டர் ஒன்றில் பேக்கேஜ் குடிநீர் கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாக, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், இப்படிப்பட்ட தீர்ப்புகள் வந்த பிறகும், தியேட்டர், ஓட்டல் போன்றவற்றில் எம்.ஆர்.பி-யை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. இதுபற்றி புகார் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பது எப்படி? உள்நாட்டு பொருட்களின் தரம் சர்வதேச தரத்துக்கு இணையாக பேணப்பட வேண்டும். அப்போதுதான் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் முழுமையாக வெற்றிபெறும்”. இவ்வாறு பஸ்வான் கூறினார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon