மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஆசிரியர் கவனக்குறைவால் பள்ளிக்குள் அடைந்து கிடந்த மாணவன்!

ஆசிரியர் கவனக்குறைவால் பள்ளிக்குள் அடைந்து கிடந்த மாணவன்!

பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பள்ளி வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு மாணவனை உள்ளே வைத்து பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் மூன்று ஆசிரியர்கள், இரண்டு சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மொத்தம் 19 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 18 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜான்சன் என்ற மாணவன் கடைசி மேஜையில் தூங்கியுள்ளார். ஆனால் இதை கவனிக்காத ஆசிரியர் பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லும் அவசரத்தில் வகுப்பறையைப் பூட்டிச் சென்றுவிட்டார்.

தூங்கி எழுந்த மாணவன் யாரையும் காணவில்லை என்று அதிர்ந்து சத்தம் போட ஆரம்பித்தான். ஜன்னல்அருகில் நின்று கதவை திறக்கும்படி கூச்சலிட்டுள்ளான். இந்த பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும், தலைமை ஆசிரியை அறை, வகுப்பறை கட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. மாணவனின் சத்தம் கேட்டு கட்டுமானப் பணியிலிருந்தவர்கள் தலைமை ஆசியருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்தவுடன் அவர் விரைந்து வந்து மாணவனை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தார். இரண்டு மணி நேரம் மாணவன் அறைக்குள் பயத்தில் அழுதுகொண்டிருந்தான். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். ஆசிரியர்கள் கவனக்குறைவால் மாணவனை அறைக்குள் வைத்து பூட்டி சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்ல மாணவர்களை விட ஆசிரியர்கள்தான் அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அந்த ஆர்வத்தால்தான் மாணவன் வகுப்பறைக்குள் அடைந்து கிடந்துள்ளான். ஆனால், மாணவர்கள் வீட்டில் இருப்பதைவிட பள்ளியில்தான் அதிக நேரம் இருக்கின்றனர் என்பதால் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அக்கறையுடனும் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon