மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

மர்மக்காய்ச்சலால் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் உயிரிழப்பு!

மர்மக்காய்ச்சலால் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சென்னை பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது பகிமா, ஆறு வயது முகம்மது ஆகிய இரண்டு குழந்தைகள் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை இரண்டு குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது குழந்தை ஏஞ்சலும் மர்மக்காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரே நாளில் மர்மக்காய்ச்சலுக்கு மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், குழந்தைகள் மருத்துவமனையில் காசநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி கீர்த்தனாவும் நேற்று இறந்தார். இதனால் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்தது.

இதற்கு முன் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட சில கிராமங்களில் கடந்த மாதம் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதில் 12 குழந்தைகள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொழிச்சலூர் பகுதியில் மருத்துவக்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டு, முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் காய்ச்சல் பராவாமல் இருக்க நிலவேம்புக் கசாயமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் மருத்துவமனையில் சரியான முறையில் அளிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon