மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

கனிமொழி குடியரசுத்தலைவர் சந்திப்பு!

திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட காவிரி குறித்த தீர்மான அறிக்கையை இன்று கனிமொழி எம்.பி. குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கச் செல்கிறார். கடந்த 13ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாயச் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயச் சங்க பிரதிநிதிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மேலும் சட்டமன்றத்தை கூட்டி அவசர மற்றும் சிறப்பு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். விவசாயச் சங்க பிரதிநிதிகளை கூட்டிக்கொண்டு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை, முடிந்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் அவரது பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்றார். மு.க.ஸ்டாலின் உடன் திமுக எம்.எல்.ஏ-க்கள் பொன்முடி, துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் இன்று, திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை திமுக எம்.பி. கனிமொழி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து சமர்ப்பிக்க உள்ளார். இதுகுறித்து கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “திமுக தலைவர் கலைஞர் அறிவுறுத்தலின்படி திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மனு வழங்க போகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் சம்பா, குறுவை சாகுபாடி முற்றிலும் வீணாகிக்கிறது. இடைக்கால நிவாரணத்தையாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த போகிறோம்” என்று கனிமொழி கூறியிருக்கிறார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon