ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது தினசரி விமானப் பயணங்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக எட்டு புதிய விமானங்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் குர்கான் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய விமான நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிலையில், இண்டிகோ, ஏர் ஏசியா போன்ற மிகப்பெரிய விமான நிறுவனங்களுடனான தனது போட்டியை அதிகரிக்கும் விதமாக தினசரி விமானங்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன நிர்வாக இயக்குநர் அஜய் சிங் கூறுகையில், “தற்போது எங்களிடமுள்ள 17 விமானங்கள் இந்தியாவின் பிராந்திய இணைப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு நாங்கள் மூன்று புதிய விமானங்களை அறிமுகப்படுத்தினோம். மேலும், இந்த நிதியாண்டின் முடிவுக்குள் இன்னும் மூன்று விமானங்களை இறக்கத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த சில வாரங்களில் மூன்று சர்வதேச இடங்களுக்கும் எங்களது விமானங்களை இயக்கவுள்ளோம்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது 43 விமானங்களை கொண்டுள்ளதோடு, தினசரி 320 விமானப் பயணங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 100 புதிய விமானங்கள் வாங்குவதற்காக போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.