மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

சரியான பாதையில் இந்தியப் பொருளாதாரம்!

சரியான பாதையில் இந்தியப் பொருளாதாரம்!

இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கியின் தலைவர் கே.வி.காமத் தெரிவித்துள்ளார். நியூ டெவலப்மெண்ட் பேங்க் அல்லது பிரிக்ஸ் டெவலப்மெண்ட் பேங்க் (BRICS - Brazil, Russia, India, China, South Africa) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இணைந்து உருவாக்கிய (வங்கி) நிதி நிறுவனமாகும். இவ்வங்கி பிரிக்ஸ் நாடுகளின் பொதுத்துறை மற்றும் தனியார் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதியுதவி வழங்கி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இவ்வங்கி, சீனாவின் ஷாங்காய் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில் பிரிக்ஸ் வங்கியின் தலைவர் கே.வி.காமத் கூறுகையில், “இந்தியாவின் வளர்ச்சியை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போதும் அது சரியான முறையில் பயணித்து வருவது தெரிகிறது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட இந்த அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் இன்னும் அதிக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு தானியங்களின் மேலாண்மை சீர்திருத்தங்கள், தாமாக முன்வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தின் மூலமாக பதுக்கப்பட்ட சொத்துகளை வெளிக்கொணர்தல் உள்ளிட்ட காரணிகள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுத் தருகின்றன. வட்டி விகிதப் குறைப்பால் பணவீக்கமும் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. எனவே, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து காரணிகளும் சரியாக உள்ளன. இதே வேகத்தை மத்திய அரசு தொடர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கியின் முதல் தலைவரான கே.வி.காமத், முன்னதாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சி.இ.ஒ. மற்றும் தலைவர் பொறுப்புகளை வகித்துள்ளதோடு, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon