மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ராமர் பிள்ளை - நம்பிக்கைகளும் குற்றச்சாட்டுகளும்!

ராமர் பிள்ளை - நம்பிக்கைகளும் குற்றச்சாட்டுகளும்!

குறைந்த விலையில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்ததாக ஒரு காலத்தில் பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. 1999இல் தனியாக நிறுவனம் தொடங்கி மூலிகை பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்தார். ஆனால், அது கலப்படப் பெட்ரோல் என்றும் அதனை பயன்படுத்தி வாகனங்களை இயக்கினால் ஏற்படும் புகை ஆபத்தானது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து ராமர் பிள்ளையை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ராமர் பிள்ளை உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ராமர் பிள்ளை உள்ளிட்டவர்கள் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ராமர் பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

யார் இந்த ராமர் பிள்ளை? 1999ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில் மூலிகை பெட்ரோலை தயாரித்துக் காட்டி பாராட்டு பெற்றார். அதன்பிறகு கொஞ்ச காலத்துக்கு தினசரிகளில் முதல் பக்க செய்திகளில் இடம்பிடிப்பவராக இருந்தார். ஐ.ஐ.டி-யிலுள்ள அறிவியல் அறிஞர்கள் முன்னிலையிலும் பெட்ரோல் தயாரித்து காட்டினாலும், அவருக்கு தியரியாக கண்டுபிடிப்பை விளக்க தெரியவில்லை. அறிவியல்பூர்வமாக அவரால் நிரூபிக்க இயலவில்லை. மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ராமர் பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பிரபலமான ஆங்கில இதழ்கள் கூட அவரை பேட்டி எடுத்து வெளியிட்டது. தமிழ் வார இதழ்களும் கூட அவரது நேர்காணலை வெளியிட்டு கொண்டாடின. இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபிக்க தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை ‘மூலிகை எரிபொருள்’ என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார். அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை தொடங்கினார். முன்பணம் பெற்றுக்கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார். ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சி.பி.ஐ. மேற்கொண்ட அதிரடிச் சோதனையில்தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. மூலிகை பெட்ரோலை பல்வேறு ஆய்வாளர்கள் பரிசோதித்தனர். விஞ்ஞானிகளும் பரிசோதித்தனர். இறுதியில் இது பெட்ரோல் இல்லை என்று கூறி விட்டனர். இதன் காரணமாக பிள்ளையின் மூலிகை பெட்ரோலுக்கு காப்புரிமை கிடைக்கவில்லை. அதன் பின்னர் தனது பார்முலாவை பறிக்க முயற்சி, ஆள் கடத்தல் என பல சர்ச்சைகளில் சிக்கினார் ராமர் பிள்ளை. ஆனாலும் அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்து ஏதாவது பரபரப்பை கிளப்பி கொண்டுதான் இருந்தார் ராமர் பிள்ளை. ஒருமுறை, ‘நான் கண்டுபிடித்த மூலிகை எரிபொருள் உண்மை என்று ஐரோப்பா யூனியனை சேர்ந்த டென்மார்க் அறிவியல் தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தில் சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் உற்பத்தி செய்யும் எரிபொருள் பெட்ரோலுக்குப் பதிலாக விளங்குகிறது என அங்கீகாரம் வழங்கி உள்ளது. மேலும் உலக காப்புரிமை அமைப்பு எனது கண்டுபிடிப்பை புதுமையானது என்றும், காப்புரிமை பெற தகுதியானது என்றும் கூறி உள்ளது. எனது எரிபொருள் உற்பத்திக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளேன். விரைவில் காப்புரிமை கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் பெற்ற இந்த வெற்றியை முதல்வர் கருணாநிதியின் பாதத்தில் சமர்ப்பித்து உலக நாடுகளின் எரிபொருள் பற்றாக்குறையை சரி செய்வேன். ஒரு லிட்டர் எரிபொருள் உற்பத்தி செய்ய ரூபாய் ஐந்து மட்டுமே செலவாகிறது. நான் தற்போது அமோனியம் குளோரைடு மற்றும் பிரக்டோஸ், சிட்ரிக் அமிலம் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து எரிபொருள் தயாரிக்கிறேன். இது ஒருமுறை. இதுபோல 10 முறைகள் உள்ளன. சிட்ரிக் அமிலத்துக்கு எலுமிச்சம் பழச்சாற்றை பயன்படுத்துகிறேன். விரைவில் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் லிட்டர் கடல்நீரை எடுத்து பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக மாற்றிக் காட்டுவேன். சிலர் மிரட்டி என்னுடைய காப்புரிமையை கைப்பற்றும் எண்ணத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் யார் என்று எழுத்து மூலம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்கொடுக்க உள்ளேன்’ என்றார் ராமர்.

கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் ராமர் பிள்ளை குறித்த செய்திகள் வெளியாவதும் மறைவதும் இருந்தது. அப்போது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர் பிள்ளை, ராணுவ பயன்பாட்டுக்காக தம்முடைய மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், ‘இதற்காக மும்பையில் உள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். நான் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்னை ஆக்கப்பட்டது. என்னுடைய மூலிகை பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும். என்னுடைய மூலிகை பெட்ரோல் திட்டத்துக்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளனர்’ என்றார்.

இன்னொரு முறை ஒரு இதழுக்கு பேட்டி கொடுக்கும்போது ‘என் கண்டுபிடிப்பை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியை சந்திச்சுப் பேசினேன். அவர்கிட்ட என் மாற்று எரிபொருளை சோதனை செஞ்சு காட்டினேன். அதைத் தொடர்ந்து பாபா ராம்தேவையும் சந்திச்சிப் பேசினேன். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி, என் கண்டுபிடிப்பைத் தத்து எடுத்துக்கிட்டது போல, எல்லா உதவிகளையும் செஞ்சார். கிட்டத்தட்ட ரூபாய் 1.5 கோடி செலவில் மாற்று எரிபொருள் தயாரிப்பதற்கான எந்திரம் தயாராகிடுச்சு. ஹரித்துவாரில் இருக்கு. சென்னையிலும் இடம் பார்த்தாச்சு. கடைசிக்கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கி. அதுவும் முடிஞ்சதுன்னா, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உற்பத்தி ஆரம்பிச்சுடும். பரபரப்பா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆனா இப்போகூட, ரவிசங்கர்ஜியை சந்திக்கப் போற ஒவ்வொரு தடவையும் அதைத் தடுக்கிறதுக்கு பல பேர் சதி செய்றாங்க. ஒருத்தனை வளரவிடாம காலைப் பிடிச்சு இழுத்துவிடுறதுல இத்தனை பேர் ஏன் ஆர்வமா இருக்காங்கன்னு புரியல’ என்ற ராமர் பிள்ளை, அவரது மாற்று எரிபொருள் ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்கு கிடைக்கும் என்றார்.

இப்படி அவர் வாழ்க்கை முழுவதும் மூலிகை பெட்ரோல் குறித்து நம்பிக்கையுடன் பேசிக்கொண்டேதான் இருந்தார். இதன் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் எண்ணற்ற இன்னல்களையும், குற்றச்சாட்டுகளையும் சந்தித்தார். எந்த நம்பிக்கை அவரை இந்த அளவு ஈடுபடுத்தியது என்பதும் தெரியவில்லை. அவரது குடும்ப வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. சென்னையில் ராமர் பிள்ளை வசித்து வந்தாலும், தனது பெட்ரோல் தயாரிப்புக்கு யாராவது உதவுவார்கள் என்று ஊர் ஊராக பயணம் செய்து கொண்டேதான் இருந்தார். பெட்ரோல் விலை ஏறும் போதெல்லாம், ராமர் பிள்ளையின் கிராமத்து முகம் நமது நினைவுக்கு வருவதும் தவிர்க்க முடியாது. ஆனால், ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்ட கதையை யாராலும் தொடர இயலாது என்பது போல ராமர் பிள்ளையின் கதையும் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

- விஜய் மகேந்திரன்

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon