மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

இன்று, உலக கை கழுவும் தினம்!

இன்று, உலக கை கழுவும் தினம்!

நமக்கு வரும் நோய்களில் பல கை கழுவாமல் உண்பதால் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இன்று, அக்டோபர் 15ஆம் தேதி உலக கை கழுவும் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்த தினம் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கமே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குதான்.

தமிழகத்தில் 90 சதவிகிதத்துக்கு அதிகமானவர்கள் உணவு சாப்பிட கைகளைப் பயன்படுத்துகிறார்கள். கைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால், வயிற்று நோய் மற்றும் சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. கைகள் சுத்தமாக இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவிகிதம் வராமல் தடுக்க முடியும். ஐந்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளின் உயிரிழப்பின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். இந்தியாவில், கைகளை முறையாக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்துக்கு ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இக்காரணத்துக்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதனால், கைகளை சுத்தமாகக் கழுவினால் இதுபோன்ற நோய்களைத் தடுக்க முடியும்.

கைகளை எப்போது, எவ்வாறு கழுவ வேண்டும்?

கைகளை அவசர அவசரமாக 2-3 விநாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 விநாடியாவது கை கழுவ வேண்டும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்த பின் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

எந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்புகூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.

வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும். அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை கை கழுவ பயன்படுத்தக்கூடாது. கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, 60 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon