மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

அரசு மருத்துவமனைகளில் முடி திருத்தகம்!

அரசு மருத்துவமனைகளில் முடி திருத்தகம்!

நோயாளிகளின் தனிப்பட்ட சுத்தத்தை பராமரிப்பதற்காக கர்நாடக அரசு அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தலைமுடி, தாடி போன்றவை ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா? என்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்பிறகு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஆர்.ரமேஷ்குமார் சார்பாக அரசு மருத்துவமனைகளில் முடி திருத்தகம் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலுகா மருத்துவமனைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை சரியாக செயல்படுத்தும்போது நோயாளிகளின் மன நம்பிக்கையை அதிகரிக்கும். அதே நேரத்தில் சுத்தத்தையும் பராமரிக்கும் எனவும் குறிப்பில் கூறியுள்ளனர்.

மருத்துவமனைகளில் முடி திருத்துபவருக்கான இடத்தை அளித்து, எத்தனை பேருக்கு முடி திருத்தம் செய்கிறார்கள் எனவும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்கள். கர்நாடக அரசின் இந்த உத்தரவை மருத்துவ உலகைச் சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளார்கள். நோயாளிகளின் தனிப்பட்ட சுகாதாரம் ஒருபுறம் என்றால் விபத்தில் மாட்டி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடலில் உள்ள முடியை நீக்க வேண்டியிருக்கும். ஹெர்னியா பிரச்னை உள்ளவர்களுக்கு சிகிச்சை செய்யும்போதும் முடி நீக்கம் செய்ய வேண்டியிருக்கும். தாடியை வளர்க்கும் நோயாளிகளுக்கு பாக்டீரியா தொற்று மருத்துவமனையில் ஏற்படும் வாய்ப்பு உண்டு. தாடியை ட்ரிம் செய்து கொண்டோ அல்லது முழுக்க ஷேவ் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பும் குறைவு. பார்க்கும்போது நோயாளிகள் மாதிரி தெரியவும் மாட்டார்கள் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மத ரீதியில் தாடி மற்றும் முடி வைத்துள்ளவர்களை முடி திருத்த சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் எனவும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு வழிகாட்டியுள்ளனர். ‘நோயாளிகளின் நலனுக்காக எடுத்துள்ள முடிவுதான் இதுவே தவிர, யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மத அடிப்படையில் சிலர் தாடி, முடி வளர்ப்பார்கள். அவர்களைக் குறைக்க சொல்ல மாட்டோம். அதே நேரத்தில் சுத்தமாக உள்ள நோயாளிகளை பார்த்து மற்ற நோயாளிகளுக்கும் முடி திருத்தம் செய்துகொள்ளும் எண்ணம் வரும். இதனால் மருத்துவமனைகளின் சுற்றுப்புற சூழலும் மாறும்” என்கிறார் அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon