மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

PHOTOGRAPHY: மறைந்துவரும் கலாச்சாரச் சின்னம்!

PHOTOGRAPHY: மறைந்துவரும் கலாச்சாரச் சின்னம்!

- சஜீஷ் ராதாகிருஷ்ணன்

கலாச்சாரச் சின்னம் என்றதும் தாஜ்மஹால் அல்லது தஞ்சை கோபுரம் என மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டடங்களே மனதில் தோன்றி மறையும். ஆனால், அதையும் விட நமக்கே உரித்தான நமது கலாச்சாரத்தில் நம்முடனே இப்பாரதத்தில் வாழ்ந்து, நம்மாலேயே அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒரு கலாச்சாரச் சின்னம் யானை.

படம்: பிரடீக்

‘ஜங்கிள் புக்’ என்ற ஆங்கில திரைப்படத்தில் ஒரு காட்சி. மௌக்லி, பகீராவுடன் செல்லும்போது ஒரு யானைக்கூட்டத்தைக் கண்டு பிரமித்த மௌக்லியிடம், பகீரா தலை தாழ்த்தி வணங்கச் சொல்லும்போது இந்த உரையாடல் நடைபெறும்.

மௌக்லி: ஓ...யானைகள்

பகீரா: தலை வணங்கு

மௌக்லி: ஏன்?

பகீரா: இவர்கள் இந்த காட்டை உருவாக்கியவர்கள். ஆறுகள் இவை தந்தங்கள் கிளறிய வழி பாயும். இலைகள் இவர்களின் துதிக்கை காற்றில் விழும். காண்பவை எல்லாம் இவர்களால் உருவாக்கப்பட்டவை மலைகள், மரங்கள், மரங்களில் வாழும் பறவைகள்.

காடுகளின் அரசன் சிங்கங்கள் என அறியப்பட்டாலும், யானைகளே உண்மையான அரசர்கள். மேற்சொன்ன உரையாடலில் பகீராவின் உரையாடல் இவ்வாறு முடியும், “எல்லாவற்றையும் உருவாக்கிய இவர்கள் உன்னை உருவாக்கவில்லை. அதனால்தான் நீ காட்டை விட்டு போகவேண்டும்”. அது மௌக்லிக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் நாம் யானைகளுடனே நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கதிரடித்தல் முதல் கட்டடம் கட்டுதல் வரை, கோயில் பூஜை முதல் கோட்டை காவல் படை வரை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் யானைகளை பணியமர்த்தி இருக்கிறோம்.

படம்: சஜீஷ்

விநாயகனை வடக்கிலும் தெற்கிலும் பாரபட்சம் இன்றி தூக்கியாடும் இந்தியாவில் யானைகள் ‘அழிந்து வரும்’ உயிரினங்களின் பட்டியலில் இருக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், காடுகளை ஆளும் இந்த விலங்கினம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. கடந்த 50-60 வருடங்களில் மட்டும் யானைகளின் எண்ணிக்கை 50% ஆக குறைந்துள்ளது.

மனிதனும் யானைகளும்

சிந்து சமவெளி காலம் முதலே ஒன்றொடொன்றாக வாழ்ந்த நாம் சமீப காலமாக மிகப்பெரும் இழப்பை இரு தரப்பிலும் சந்தித்து வருகிறோம். தந்தங்களுக்காக மிக அதிக அளவில் யானைகள் அழிக்கப்பட்டாலும் இந்தியாவில் வேலைக்காகவும், மக்களின் ஆக்கிரமிப்பும் மிக முக்கிய காரணங்கள். யானைகள் வாழ மற்ற காட்டு விலங்குகளை விட அதிக நிலப்பரப்பு தேவை. அதுமட்டுமின்றி யானைகள் மனிதர்களை போலவே ஒரு பெரிய குடும்பமாக வாழும். இதனாலேயே மனித ஆக்கிரமிப்புகளால் முதலில் பாதிக்கப்படுபவை யானைகள். யானைகள் மிகவும் நேர்த்தியான வாழ்க்கை முறையை கடைபிடிப்பவை. இதனாலேயே குறிப்பிட்ட காட்டுப் பாதையையே தனது பயணத்துக்குப் பயன்படுத்தும்.

இந்த பாதைகள் மக்கள் விவசாய நிலங்களாகவோ, வீட்டு மனைகளாலோ மாற்றப்படும்போது மனிதன் பிரச்னைகளுக்கு வித்திடுகிறான். யானைகளின் உணவுமுறையும், கூட்டமாக வாழுதலும் விவசாய நிலங்களுக்கு அருகில் இவை வாழ்வது இயாலாததாகிறது. பயிர்களை காக்க மனிதனும், தனது வாழ்விடத்தை காப்பாற்ற யானைகளும் நடத்தும் போராட்டத்தில் இருதரப்பும் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறோம்.

படம்: சுப்ரா

யானைகளை வேலைக்கும், கோயிலுக்கும் பயிற்றுவிக்கும்போது, யானைகள் சில சமயங்களில் வற்புறுத்தலுக்கு ஆளாகின்றன. மதம் பிடிக்கும் காலங்களில் யானைகளை வேலைக்கோ அல்லது கோயில் விழாக்களில் பயன்படுத்தும்போது பல சமயங்களில் மனித உயிரிழப்புக்கு காரணமாகிறது. காரணம், காரணகர்த்தா மனிதனே. நாளை யானை வீடுகளை இடித்தது என்றோ, மக்கள் யானைகளை விரட்டினர் என்றோ, தேயிலை தோட்டத்தில் யானை புகுந்தது என்றோ, காட்டு யானை ரயிலில் அடிபட்டது என்றோ செய்தித்தாளில் படிக்க நேர்ந்தால் ஒரு நொடி யோசியுங்கள். காட்டு வழிப்பாதையில் ஒரு யானையை காண நேர்ந்தால் அழிந்துவரும் ஒரு விலங்கினை காண்கிறோம் என்று மனதில் கொள்ளவும்.

முகப்புப் படம்: பரத் சாம்பசிவம்

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon