மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

சிறப்புக் கட்டுரை: சவுதி கனவு கலைகிறதா? -ஜெ.ஜெயரஞ்சன்

சிறப்புக் கட்டுரை: சவுதி கனவு கலைகிறதா? -ஜெ.ஜெயரஞ்சன்

1970களிலும் 1980களிலும் இந்தியாவில் வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. அரசுதான் பெரிய வேலை கொடுக்கும் நிறுவனம். மற்ற தொழில்கள் அவ்வளவு வேலையை உருவாக்க இயலாமல், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் இருந்தது. அப்படி ஒரு சூழல் இருந்தது என்பதையே இப்போதுள்ள இளைஞர்கள் புரிந்துகொள்வது கடினம். கல்லூரிப் படிப்பு முடியும்முன்னர் எல்லோரிடமும் நிலவிய அச்சம், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதே. சிறப்பாகப் படிக்கும் மாணவர்கள் அரசு மற்றும் வங்கி நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்வாகி வேலை கிடைத்துச் சென்றுவிடுவார்கள். மற்றவர் அனைவரும் விழிபிதுங்கி நிற்பது வாடிக்கை. அதன் விளைவாகத் தோன்றிய மன அழுத்தமும் சமுதாய நிராகரிப்பும் மிகக் கொடுமையானது. அந்தச் சமயத்தில் வெளிவந்த பல சிறுகதைகளும், நாவல்களும், கவிதைகளும் இந்த அவலத்தை நன்கு படம்பிடித்துப் பதிவுசெய்துள்ளன.

இப்படியான சூழலில்தான், OPEC என்ற பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் பன்மடங்கு உயர்த்தப்பட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் அனுபவித்த பொருளாதார நெருக்கடி ஏராளம். அதேசமயத்தில், எண்ணெய் வளமிக்க மேற்கு ஆசிய நாடுகள் செல்வத்தில் திளைக்க ஆரம்பித்தன. செல்வம் பெருகப் பெருக அந்நாடுகளின் மக்கள் புதிய சாலைகளையும் கட்டடங்களையும் ஏன், புதிய நகரங்களையும்கூட நிர்மாணிக்கத் தொடங்கினர். வியாபாரம் செழித்தது. வாகனங்கள் பெருகின. இவை அனைத்துக்கும் தேவையான ஆட்கள் அந்நாடுகளில் இல்லை. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற தெற்காசிய ஏழை நாடுகளில் ஏராளமான மக்கள் வேலையின்றி தவித்துவந்தனர். இத்தகைய தொழிலாளர்களை மேற்காசிய நாடுகள் பெருமளவில் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். ஐரோப்பியர்களைவிட இவர்கள் மிகக் குறைந்த கூலிக்கு நீண்டநேரம் வேலைசெய்யத் தயாராக இருந்தார்கள். மேலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்கள் நலனைக் காப்பதில் காட்டிய அக்கறையை தென் ஆசிய நாடுகள் காட்டவில்லை. ஆகவே, தொழிலாளர்கள் பெருமளவில் மேற்கு ஆசிய நாடுகளுக்கு வேலைநிமித்தம் படையெடுத்தனர். அவர்கள் பெற்ற கூலி வருமானம் இந்தியா போன்ற நாடுகளில் கனவில்கூட நிறைவேறாத ஒன்றாக இருந்தது. அவ்வாறு பெருமளவில் வேலை தேடிச் சென்றவர்களில் இந்தியாவில், கேரள மாநிலம் முதலிடம் பிடித்தது. அந்த மாநிலத்தைப் பின்பற்றி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் பெருமளவில் தொழிலாளர்கள் வேலை தேடிச் சென்றனர். அவர்கள் உழைத்து ஈட்டிய வருமானத்தைக் கொண்டு புதிய வீடுகள் பல கட்டப்பட்டன. நிலத்திலும் முதலீடு செய்யப்பட்டது. பொதுவாக, வறுமையில் உழன்ற பல குடும்பங்கள் வசதிகள் பெருகி முன்னேற்றம் கண்டன. இதன்விளைவாக, மேற்கு ஆசிய நாடுகளில் வேலை என்பது ஒரு பெரும் கனவாக மாறியது. இதன்பிறகு தொடங்கியதுதான் சிங்கப்பூர், மலேஷிய நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் படலம். வியாபார நிமித்தம் அந்நாடுகளுக்குச் செல்வது நீண்ட வரலாறு கொண்டது.

இவ்வாறு, பல நாடுகளிலிருந்தும் போட்டி போட்டிக்கொண்டு தொழிலாளர்கள் வரத் தொடங்கியதும் மேற்கு ஆசியாவில் கூலிமட்டம் குறையத் தொடங்கியது. கூலி மட்டம் குறைந்த அதேவேளையில் இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்துவந்ததால், அங்கு பெறும் கூலியின் மதிப்பு இந்தியப் பணத்தில் அதிகமாகவே திகழ்ந்ததால், இங்கிருந்து வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை குறையவே இல்லை. கனவு தொடர்ந்தது.

இந்தக் கனவு நீடிக்குமா என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக எழுந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம், பெட்ரோலியப் பொருள்களின் விலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு. OPEC என்ற கூட்டமைப்பு முன்புபோல் வலுவாக இல்லை. சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் (இரண்டும் பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளர்கள்) தொடரும் நிழல் யுத்தம், ரஷ்யாவை வீழ்த்த பிற நாடுகள் ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடி, (ரஷ்யாவும் பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளர்) அமெரிக்காவிலும் கனடாவிலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஷேல் காஸ் ஆகிய அனைத்துக் காரணிகளும் ஒருங்கே செயல்படுவதால், பெட்ரோலியப் பொருள்களின் விலை கடும் சரிவைக் கண்டுள்ளன. இதனால் பெட்ரோலிய வருமானத்தையே பெரிதும் நம்பியிருக்கும் மேற்காசிய நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் நிதிச் சிக்கலையும் சரிவையும் சந்திக்கின்றன. இந்த நிதிச்சிக்கல் போதாதென்று சிரியா, ஈராக் நாடுகளில் நடக்கும் நிழல் யுத்தங்களில் இந்நாடுகள் பெரும் பணத்தை செலவு செய்துவிடுகின்றன. இதன்விளைவாக, அந்நாடுகளின் பொருளாதாரங்கள் மந்தநிலையை எட்டியுள்ளன. கட்டடங்கள் கட்டும் பணியில் தொடங்கி, பல வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்பணிகள் நின்றுபோனதால், இப்பணிகளில் அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கூலியும் வழங்கப்படவில்லை. வேலையிலிருந்தும் நிறுத்தப்படுகிறார்கள். இப்படி வேலையின்றி தவிக்கும் இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.

மேற்கு ஆசிய நாடுகளுக்கு வேலைக்குச் செல்லவேண்டுமானால் அந்த நாட்டில் யாரிடம் வேலைக்குச் செல்கிறோமோ அவர்தான் இங்கிருந்து போகும் நபருக்கு விசாவை வழங்க சிபாரிசு செய்ய வேண்டும். அப்படி சிபாரிசு செய்வதால் இங்கிருந்து போகும் தொழிலாளர் தங்குவது, வேலை பார்ப்பது, வேறு வேலைக்கு மாறுவது என அனைத்துக்கும் சிபாரிசு செய்த நபரையே சார்ந்திருக்கும் நிலை. மேலும் இங்கிருந்து வேலைக்குப் போகும் தொழிலாளியின் கடவுச் சீட்டும் உள்ளூர் முதலாளிவசம் சென்றுவிடுவதால், வேலை தேடிச் செல்லும் நபர் அடிமையாக வேலை செய்வது மட்டுமின்றி, தனக்கு சிபாரிசு செய்தவர் மனது வைத்தால் மட்டுமே தாயகம் திரும்ப முடியும். இந்த அடிமைச்சூழல் நிலவுவது நமது வெளியுறவு அமைச்சகத்துக்குத் தெரியாதா என்ன? சர்வதேச அரசியலில் இதையெல்லாம் பார்க்கும் நிலையிலா இந்தியா இருக்கிறது? மேலும் மேற்கு ஆசியாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அந்நியச் செலாவணி (உழைப்பாளர்கள் பெறும் கூலியை தாய் நாட்டுக்கு அனுப்புவதன்மூலம் வருவது) ஏறத்தாழ 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது ரூ.6,700 கோடி). உரிமைகளைப் பேசி இந்த வருமானத்தை கெடுத்துக்கொள்ள முடியுமா?

ஆனால் இத்தகைய கூலித் தொழிலாளர்களின் கூலி குறைந்ததாலும் வேலை இழப்பு ஏற்பட்டதாலும் இவ்வாறு தாய் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தப் பணத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத் திட்டங்கள் கலைந்துபோகும் வாய்ப்புகள் மிக அதிகம். மேலும் இதை நம்பி வாங்கிய கடன் இவர்களை எங்கு கொண்டுபோய் விடும்? மேற்கு ஆசியாவில் பணிபுரிந்து வேலையிழந்த தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்படப்போகும் சமூக பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் கவனமான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். ஆறாத் துயரோடு தாயகம் திரும்பும் இத்தகைய தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருப்பது நமது அரசுகளின் கடமை.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon