இந்தியாவின் 67 எண்ணெய் கிணறுகளை ஏலத்தில் விட முடிவுசெய்யப்பட்டுள்ளநிலையில், ஏலத்தில் பங்கேற்பதற்கான கால அவகாசத்தை ஒரு மாதத்துக்கு எண்ணெய் அமைச்சகம் நீட்டித்துள்ளது.
மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னதாக, இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான கடைசித் தேதியாக அக்டோபர் 30 என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து இந்த ஏலத்தில் பங்கேற்கவும், முதலீடு செய்யவும் அதிகப்பேர் ஆர்வமாக இருப்பதால் ஏலத்தில் பங்கேற்கும் கடைசித் தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் கிணறுகளில் சுமார் 88 மில்லியன் டன்கள் அளவிலான ஆயில் உற்பத்தி செய்ய இயலும். இதன் மதிப்பு ரூ.77,000 கோடியாகும். இந்த கிணறுகளில் அதிகளவில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்யப்படும்பட்சத்தில், வருடத்துக்கு ரூ.3,500 கோடி செலவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு குறைக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற எண்ணெய் கிணறுகளை வைத்திராத பலபேர் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.