மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

பசியின்மையும், களைப்பும் இருக்கிறது - பெரியாருக்கு அண்ணாவின் கடிதம்!

பசியின்மையும், களைப்பும் இருக்கிறது - பெரியாருக்கு அண்ணாவின் கடிதம்!

இணைய வெளி எங்கும் பரவி விட்ட இக்காலத்தில் அந்தரங்க வெளி என்பது இன்று இல்லாமல் ஆகிவிட்டது. அப்படிச் சுருங்கிப் போன அந்தரங்க வெளியை பாதுகாப்பது அதிகாரப் பீடங்களில் இருப்பவர்களுக்குக்கூட சாத்தியமில்லாது போன ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம். ஆனால், பொதுவாழ்வில் இருப்போர் தங்கள் வாழ்வு பற்றி ரகசியம் எதையும் பேண முடியாது. எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றபோது பரவிய வதந்திகளை அடுத்து அந்த சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் அரசே அறிக்கைகளை வெளியிட்டது. எம்.ஜி.ஆர். பற்றிய சிறிய செய்திப்படம் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் அனைத்து திரையரங்கங்களிலும் திரையிடப்பட்டது. ஆனால், இன்று தமிழக முதல்வர் உடல்நிலை பற்றி எவருக்கும் தெரியவில்லை. அவரைச் சந்தித்தவர்களும் எவரும் இல்லை என்னும் நிலையில் இரு தலைவர்களுக்கு இடையில் நடந்த கடித பரிமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

10-10-1968 அன்று அறிஞர் அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டபோது பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் 90ஆவது பிறந்தநாள் செய்தியினை ‘விடுதலை’ மலரில் (17-9-1968) பார்த்துவிட்டு, அமெரிக்காவில் நியூயார்க் மருத்துவமனையிலிருந்து பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் காலத்தால் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. ‘பேரன்புடைய பெரியார் அவர்கட்கு, வணக்கம். என் உடல்நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது. வலியும் அதற்குக் காரணமாக இருந்து வந்த நோய்க்குறியும் இப்போது துளியும் இல்லை. பசியின்மையும், களைப்பும் இருக்கிறது. டாக்டர் மில்லரின் யோசனையின்படி இந்தத் திங்கள் முழுவதும் இங்கு இருந்துவிட்டு நவம்பர் முதல் வாரம் புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி, பரிமளம், செழியன், ராஜாராம், டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். சென்னை மருத்துவமனையிலும், விமான தளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடனும் இருந்த தோற்றம் இப்போதும் என்முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவேதான் கவலைப்பட வேண்டியதில்லை, முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன். தங்கள் அன்புக்கு என் நன்றி. தங்கள் பிறந்தநாள் மலர் கட்டுரை ஒன்றில், மனச்சோர்வுடன் ‘துறவியாகி விடுவேனோ என்னவோ’ என்று எழுதியிருந்தீர்கள். அதைக்கண்டு மிகவும் கவலைகொண்டேன். தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்தவரையில் இத்துணை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை. அதுவும் நமது நாட்டில். ஆகவே சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினை திருமதி மணியம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள்’.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon