மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் பலம்!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் பலம்!

உரி தாக்குதலும் 17 வீரர்களின் மரணமும், அதையொட்டி இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ் நடவடிக்கையும் இந்தியாவின் பாதுகாப்பு நிலைகள் மீதான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராணுவ வீரம் மற்றும் போர் தயாரிப்பு அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்பு நிறுவல்கள்மீது விமர்சனங்கள் பல எழக் காரணமாக இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் எந்தப் போருமே, சாதாரண திட்டமிடல்களையும் அரசியல் உள்ளீடுகளையும் கடந்ததுதான். சமீபத்திய தாக்குதல் காரணமாக, தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு பதிலடியாக பாகிஸ்தான்மீது போர் புரிய வேண்டும் எனும் குடிமக்கள் சமூகத்தின் கோரிக்கைகள் அதிகமாகவே இருக்கின்றன.

பட்டுப்பாதையின் குறுக்குச் சாலைகளாக இருக்கும் இமாலயம் மற்றும் கரகோரம் பகுதிகள், பிராந்திய போர்களைக் கண்டவைதான். சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இதில் உட்படும் காரணத்தால் நிபுணர்கள், ஆய்வாளர்களின் அர்ப்பணிப்பைவிட அதிகளவு கவனத்தோடுதான் இந்நிலைமை கையாளப்பட வேண்டும்.

பொதுவாக, இந்தியாவுக்குமுன் மூன்று வழிகள் இருக்கின்றன - கன்வென்ஷனல் போர் (வழக்கமான போர்), சப்-கன்வென்ஷனல் போர் அல்லது அணு ஆயுதப் போர். வெளிப்படையாக, யாருக்கும் அணு ஆயுதப் போரில் உடன்பாடு இல்லை. சப்-கன்வென்ஷனல் போர் என்றால், இந்திய ராணுவம் அறிவித்ததுபோல, கெரில்லா திட்டங்கள் அல்லது ரகசியத் தாக்குதல்கள் நடத்துவது. மூன்றாவது வழி, கன்வென்ஷனல் போர். உண்மையில் பொருளாதார ரீதியாக, இந்தியா இம்முறை போருக்குத் தயாராக இல்லை.

பாகிஸ்தானோடு போர் புரிந்தால், அதில் முக்கியப் பங்கு இந்திய ராணுவத்துக்கே இருக்கும். இந்திய ராணுவத்தின் வருவாய் செலவினம் மற்றும் மூலதனச் செலவினம், சராசரியாக எப்போதுமே 85:15 ஆகத்தான் இருக்கிறது. கடற்படைக்கும் விமானப்படைக்கும் முறையே 50:50, 65:35 என இவ்விகிதம் இருக்கிறது. ராணுவத்துக்காக செலவிடப்படும் பணத்தில் பெரும் தொகை மூலதனச் செலவுக்காக இல்லாமல், ஊதியத்துக்கும் சலுகைகளிலுமே செலவு செய்யப்படுகிறது. இந்த தரவுகளை மேலும் ஆய்வு செய்தால், உள்நாட்டு கையகப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு இறக்குமதிகளுக்கிடையே இருக்கும் விகிதம், ராணுவத்துக்கு 70:30 ஆகவும், கப்பற்படைக்கு 50:50 ஆகவும், விமானப்படைக்கு 35:65 ஆகவும் இருக்கிறது.

ராணுவம், உள்நாட்டு கையகப்படுத்தல் மீது அதிகம் சார்ந்திருப்பதற்குக் காரணம், தங்கள் பீரங்கி மற்றும் வெடிபொருட்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள போர்த்தளவாட தொழிற்சாலைகளை (ofs) நம்பியிருப்பதுதான். 2015 சி.ஏ.ஜி. அறிக்கையின் ஊடக வெளியீட்டின் நான்காம் பக்கத்தில், “போர்த் தளவாட தொழிற்சாலைகள் ராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே ஆயுதங்களைத் தயாரிக்கிறது. இதையொட்டி, தொழிற்சாலைகள்மீது ராணுவம் சார்ந்திருப்பதும் கணிசமான அளவில் உள்ளது” என இருக்கிறது. இப்படி அதிகமாக தொழிற்சாலைகள் மீது சார்ந்திருந்ததே, ‘போர் விரய இருப்புகள்’ (war wastage reserves) அடிப்படையில், இந்திய ராணுவத்தை மிக பலவீனமான நிலையில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.

ராணுவச் செயல்பாட்டு கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தியா, ‘தீவிர போரின் நாற்பது நாட்களு’க்காக போர் விரய இருப்புகளைப் பராமரிக்க வேண்டும். 1999 கார்கில் போருக்குப் பிறகு ராணுவத்தின் தலைமையகம், ‘குறைந்தபட்சம் ஏற்கக்கூடிய இடர் அளவாக’, இருபது நாட்களுக்கான ஆயுதங்கள் & வெடிபொருட்கள் என நிர்ணயித்தது. ஆனால் 2013ஆம் ஆண்டின் சி.ஏ.ஜி. அறிக்கைப்படி, தற்போது இந்திய ராணுவத்தின் (WWR) பத்து நாட்களுக்கு மட்டுமே தாங்கும்.

இந்த அறிக்கையின்படி, 48 ஆயுத & வெடிமருந்துப் பிரிவுகளில் 52% ஆயுதங்கள் படைத் தளவாட தொழிற்சாலைகளால் தயாரிக்கப்படவில்லை. மேலும் 2009-2013 காலத்தில், படைத் தளவாடங்களின் பற்றாக்குறை பதினைந்து சதவிகிதத்திலிருந்து ஐம்பது சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் இப்பற்றாக்குறை அதிகரித்திருக்கும் என எதிர்ப்பார்ப்பதற்கு பதன்கோட், பம்போர் தாக்குதல்களும் காரணம். தொழிற்சாலைகளால் நாற்பாது நாள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க முடியவில்லை. இதனால், குறைந்தபட்சம் ஏற்கக்கூடிய இடர் அளவான இருபது நாட்களுக்குத் தேவையான போர் ஆயுதங்களையும் வெடி மருந்துக்களையும் மட்டுமாவது தயாரிக்கலாமே என ராணுவம் திட்டமிட்டது. இதையும், படைத் தளவாட தொழிற்சாலைகள் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதிலும் 73% அளவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

மனதுக்கு வரும் முதல் கேள்வி, இந்த தவறான நிர்வாகத்துக்கு யார் மீது பழி போடுவது? ராணுவத் தலைமையகம், ஆயுதங்கள் தயாரிக்க தேவையான பட்ஜெட்டைத் தயாரிக்கவில்லை என தொழிற்சாலைகள்மீது பழி போடுகிறது. ஆனால் ராணுவம்தான் மோசமான பற்றாக்குறையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறது சி.ஏ.ஜி. அறிக்கை. பாதுகாப்பு அமைச்சகத்தோடு வெறும் உரையாடல்தான் நடந்திருக்கிறதே தவிர, எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. படைத் தளவாட தொழிற்சாலைகளோ, தமக்கு எப்போதுமே இவ்வளவு ஆயுதங்களையும் & வெடிப் பொருட்களையும் தயாரிக்க திறன் இருந்ததில்லை என ராணுவத் தலைமையகத்தின்மீதும் பாதுகாப்பு அமைச்சகத்தின்மீதும் பழி போடுகிறது. ஆனால் இந்த ‘குறைந்தபட்சம் ஏற்கக்கூடிய இடர் அளவான’ இருபது நாள் கணக்கு, தொழிற்சாலைகளோடு கலந்துரையாடி எடுத்த முடிவுதான் என்கிறது, சி.ஏ.ஜி. அறிக்கை.

ராணுவத் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சகம், படைத்தளவாட தொழிற்சாலைகள் - இவை மூன்றுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான், நம் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது பிரச்னையை குறைவாக மதிப்பிடுவதாகும். சாதாரண தகவல் தொடர்பின்மை என்பதை கடந்தும் இப்பிரச்னை ஆழமாகச் செல்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக, தொழிற்சாலைகள் ரூபாய் 11,000 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பு நடந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. ராணுவத் தலைமையகம், ‘குறைந்தபட்ச ஏற்கக்கூடிய இடர் அளவு’ கணக்கை, தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் உண்மை. நம் சூழல் குறித்து தெரிந்தபோதிலுமே, ராணுவத் தலைமையகம், நம் ‘போர் இருப்புகளை’ அதிகரிப்பது குறித்து எந்தத் திட்டமும் அமைக்கவில்லை. 2015 செப்டம்பர் மாத நிலைமைப்படி, 17 வகையான முக்கிய வெடிபொருட்களுக்கு 83 சதவிகித பற்றாக்குறை இருக்கிறது. தொழிற்சாலைகள் தயாரிப்பு இலக்குகளை எட்டாததற்கும், தயாரிப்பு கொள்திறனை அதிகரிக்காததற்கும் கண்டிக்காமல் இருப்பது பாதுகாப்பு அமைச்சகம் செய்யும் தவறு. மூன்று மாதங்கள் தொடர்ந்து நடந்த கார்கில் போன்ற ஒரு போரில் இறங்க இந்தியாவிடம் வெடிபொருட்களும், ஆயுதங்களும் இருக்கிறதா என்பதை பாதுகாப்பு அமைச்சகமும், ஆயுதப்படைகளும், பிரதமரும் ஆழ நோக்கவேண்டிய காரியம். ஏனெனில், கணக்கு சரியாக வரவில்லை.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon