மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

‘தலாக்’ முறை பெண் இனத்துக்கு எதிரானது! - வெங்கய்யா நாயுடு

‘தலாக்’ முறை பெண் இனத்துக்கு எதிரானது! - வெங்கய்யா  நாயுடு

பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் தனி சட்ட வாரியத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதாவது, தலாக் நடைமுறையையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்று முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்துக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்த ஆலோசனைகளை பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரியதற்கு முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்புத் தெரிவித்து, ‘இது ஒரு சமூகத்துக்கு எதிராக தொடுக்கும் போர்’ என்று கடுமையாக ஆட்சேபம் எழுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, ‘அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் இதனை அரசியலாக்க முயற்சி செய்கிறது. மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்புபடுத்த வேண்டாம். இது பாலின நீதிக்கானதும், பெண்கள் மீதான சமூகப் பாகுபாட்டை முடித்து வைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சி’ என்று கூறியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறும்போது, “நீங்களும் விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். அறிவார்த்தமான ஒரு விவாதத்தில் உங்கள் யோசனைகளையும் முன்வையுங்கள். கருத்தொற்றுமையை வளர்த்தெடுப்போம். இதில் எதற்கு பிரதமர் பெயரை இழுத்து அவரை சர்வாதிகாரி என்று சாட வேண்டும்? நாட்டின் உண்மையான உணர்வு என்னவெனில் இந்த மும்முறை தலாக் நடைமுறை முடிவுக்கு வரவேண்டும் என்பதே. மத நம்பிக்கை காரணமாக பெண்களுக்கு எதிரான பாகுபாடு கூடாது என்பதே மக்களின் விருப்பம். இது பாலின அநீதி, பெண்களின் மாண்பைக் காப்பது மற்றும் பாகுபாட்டை முடிப்பது போன்ற நோக்கங்களைக் கொண்டது. எனவே இதனை அரசியலாக்க வேண்டாம். இது குறித்து அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அரசியல் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் உங்கள் விருப்பத்துக்கேற்ற அரசியல்கட்சியில் சேர்ந்து அரசியல் கருத்துகளை கூறுங்கள். முஸ்லிம் சட்ட வாரியத்திடமிருந்தும், மற்ற மதத்தலைவர்களிடமிருந்தும் இதனை எதிர்பார்க்கவில்லை. என்ன பிரச்னையோ, சட்ட ஆணையம் விவாதத்துக்காக எதனை வைத்துள்ளதோ, அதற்குள்ளாக இருந்து விவாதிப்பதுதான் முறை” என்றார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது