மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்!

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட பேருந்து நிலையங்களில் இருந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய இடங்களுக்குச் செல்ல 21,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு வந்து வசித்துவரும் மக்கள் தீபாவளிக்கு எவ்விதப் பிரச்னைகளும் இன்றி சொந்த ஊர்களுக்குச் சென்று வர பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் இருந்து 26ஆம் தேதி 3254 பேருந்துகள், 27ஆம் தேதி 3992 பேருந்துகள், 28ஆம் தேதி 3979 பேருந்துகள் என மொத்தம் 11225 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையின் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து 26ஆம் தேதி 2507 பேருந்துகள், 27ஆம் தேதி 3488 பேருந்துகள், 28ஆம் தேதி 4,069 பேருந்துகள் என மொத்தம் 10,064 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், கோயம்பேடு தேர்தல் ஆணையம் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. இதேபோல், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சை செல்லும் சிறப்புப் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் சிறப்புப் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மேலும் ஆந்திரா செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும் எனவும் மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கூட்ட நெரிசலில் சிக்காமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எளிதாகப் பயணம்செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பண்டிகை காலத்தில் சாலை நெரிசல் ஏற்படாமல் இருக்க கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை,வெளிசுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon