மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

தந்தையின் மதுப் பழக்கத்தால் மகன் தற்கொலை!

தந்தையின் மதுப் பழக்கத்தால் மகன்  தற்கொலை!

குடி குடியைக் கெடுக்கும் என்பதால்தான், டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்களும் மதுவிலக்குக் கோரும் சமூக ஆர்வலர்களும் தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுப் பழக்கத்தால்தான் பெரும்பாலான குற்றச் சம்பவங்களும் சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்தக் குடிப் பழக்கத்தால் பல குடும்பங்கள் திசைக்கொருவராகப் பிரிந்துள்ளனர். பெற்றோர்கள் பிரிவதால் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்படும் பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி தவறான வழியில் செல்கின்றனர். சிலர், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர்.

கோவையில் தந்தையின் குடிப் பழக்கத்தால் மன உளைச்சலுக்கு ஆளான 15 வயதுச் சிறுவன், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்தச் சம்பவம் போத்தனூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமுகேஷ் தற்கொலை செய்துகொள்வதற்குமுன் தன்னுடைய மொபைல் போனில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்துள்ளான். அதில், அவரது தந்தை சரவணனை குடிக்க வேண்டாம் என்றும் சொந்த வீட்டைக் கட்டுமாறும் வலியுறுத்தியுள்ளான்.

முகேஷ், போத்தனூர் வி.எஸ்.செங்கோட்டையா மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சரவணன் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது, குடிப் பழக்கத்தால் வேலையை விட்டுவிட்டார். ஐந்து ஆண்டுகளுக்குமுன் அவரது மனைவி இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, சரவணன் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். இதனால், முகேஷ் பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவர் மன உளைச்சலுக்கு ஆட்பட்டதால், துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் வீட்டின் கதவை தாழிடாமல் திறந்தேவைத்துள்ளார்.

முகேஷ் தற்கொலையைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து வந்து முகேஷின் உடலை மீட்டனர். முகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார், ”இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பிரிவு 174கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையையும் நடத்திவருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு, தனது குடிகாரத் தந்தையை திருத்துவதற்கு கனிஷ்குமார் (18) என்ற இளைஞர், “ எல்லாருக்கும் சாரி... எனக்கு உயிரோடு இருக்கப் பிடிக்கல. உடனே, இந்த வயசுலேயே என்ன கஷ்டம்னு யோசிக்காதீங்க. எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. என் சாவுக்கு யாரும் காரணம் இல்ல. செத்ததுக்கு அப்புறம் என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல. பார்க்கலாம். என் அப்பா, முடிஞ்சா குடிக்கிறத விட்டுட்டு, என் சாவுக்கு ஆகற செலவை, அவர் ஒழுங்கா செய்யச் சொல்லுங்க. எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. யாரும் பீல் பண்ணாதீங்க. என் போட்டோ அக்கா வீட்டுல இருக்கு. அதை பிரேம் பண்ணுங்க” என, கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்கவும், மது குடிப்பவர்களின் மனநிலையை மாற்றவும் படிப்படியாகவேணும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. மேலும் மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும்வகையில் அரசு மருத்துவமனைகளில் குடிமீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon