மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

காதலர்களுக்கு நீதிபதி கட்ஜு வழிகாட்டல்!

காதலர்களுக்கு நீதிபதி கட்ஜு வழிகாட்டல்!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு சர்ச்சைகளை உண்டாக்கும் கருத்துகளைக்கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவார். அவரது முகநூலில் ஒரு பெண்ணுக்கு, அவர் காதலித்தவரை திருமணம் செய்துகொள்ள வழிகாட்டியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கட்ஜுவுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், அந்தப் பெண் அவருக்கும் அவரது காதலருக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை விவரித்திருந்தார்.

அந்த மின்னஞ்சலில், அவரும் அவர் காதலரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்திருக்கிறார்கள். பெண்ணின் காதலர் போனில் தொடர்புகொண்டு பெண்ணின் அப்பாவிடம் போன் செய்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டிருக்கிறார். ஆனால் பெண்ணுடைய அப்பா காதலரையும், காதலரின் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்த காதலர் பெண்ணை அதற்குப்பிறகு தொடர்புகொள்ள முயன்று தலைமறைவாகிவிட, அந்தப் பெண் போலீசில் அவரை தேடச்சொல்லி புகார் கொடுத்துள்ளார். காவல்துறையும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் இந்திய குற்றப் பிரிவு, 376ஆம் சட்டப் பிரிவின்படி, திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதியைக் கொடுத்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பெண்ணின் காதலர் முன்ஜாமீனுடன் ஆஜராகி, திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு இருவரும் திருமணமும் செய்து கொண்டுள்ளார்கள். ஆனால் அவரின் மீதுள்ள கிரிமினல் வழக்கால் அரசு வேலை பாதிக்கப்படும் என கவலையடைந்து அந்த வழக்கை வாபஸ் வாங்குவது தொடர்பாகவும் இந்த வழக்கிலிருந்து மீளவும் வழி சொல்லுங்கள் எனவும் கட்ஜுவிடம் கேட்டிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்துள்ள கட்ஜு, ''18 வயதை தாண்டிவிட்டால் உங்களுக்கு விருப்பமான நபரை நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். யாரும் தடைசொல்ல முடியாது. உச்சநீதிமன்றத்தில் லதா சிங்குக்கும், உ.பி மாநில அரசுக்கும் நடந்த வழக்கில் நான் அளித்த தீர்ப்பு இணையதளத்தில் கிடைக்கிறது. அதைப் படியுங்கள். உடனடியாக, ஸ்பெஷல் லீவ் மனுவை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்யுங்கள். நீதிமன்றம் நடவடிக்கைகள் வரும்வரை காத்திருங்கள். பிரச்னை எளிமையாக முடியும் எனக் கூறியிருக்கிறார்.

பல இளம் தம்பதிகளுக்கு இதேவிதமான பிரச்னைகள் ஏற்படுவதால், அவர்களுக்கும் பயன்படும்வகையில் பெண்ணிடம் அனுமதி வாங்கி கேள்வியையும், பதிலையும் அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கட்ஜு. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி காதல் விஷயத்தில் பெண்ணுக்கு இப்படி அறிவுரை கூறியிருப்பது இணையதளத்தில் பாராட்டப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon