மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

தினம் தினம் மாத்திரை போடுபவர்கள் கவனத்துக்கு!

தினம் தினம் மாத்திரை போடுபவர்கள் கவனத்துக்கு!

சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருக்கும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை என பல வியாதிகளுக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். இப்படி நிறைய மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு சில ஆலோசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது முழுக்க டாக்டரின் ஆலோசனையின்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரைகள் எப்போது, எந்தளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாட்கள் தொடர வேண்டும் என்று மருத்துவர்கள் குறித்துக் கொடுக்கும் அளவையே பின்பற்ற வேண்டும். நீரிழிவுக்காக எடுக்கும் மாத்திரைகளும் ரத்த அழுத்தத்துக்கு சாப்பிடும் மாத்திரைகளும் ஒன்றாக, டோஸ் தெரியாமல் சாப்பிட்டால் ஏகப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதை Drug interactions என்பார்கள்.

பல மாத்திரைகளை ஒரே நாளில் எடுக்க வேண்டியவர்கள் பக்க விளைவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். கொலஸ்ட்ராலுக்கு மருந்துகள் எடுப்பவர்கள், கல்லீரல் பரிசோதனை அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. அதேபோல கொலஸ்ட்ராலுக்கு மருந்துகள் எடுப்பவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தால் அதை கண்டிப்பாக விட்டுவிடவேண்டும். இல்லாவிட்டால், கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுப்பவர்கள் உடலில் சோடியம், பொட்டாசியம், ஃப்ளூரைடு, யூரியா, கிரியாட்டினைன் அளவுகள் சரியான அளவில் உள்ளதா? என்பதை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய மாத்திரை எடுப்பவர்கள் சிறுநீரகங்கள் சரியாக இயங்குகிறதா? என்று சிறுநீரகங்கள் சார்ந்த பரிசோதனைகளையும் தகுந்த இடைவேளையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முன்னரே இவ்வாறு பரிசோதனை செய்வதால் நோய்கள் வரும் முன் தடுக்க முடியும். சிலர் உடல்நல பிரச்னைகளுக்கு டாக்டரை அணுகாமல் மருந்துக் கடைகளை அணுகி மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. டாக்டருக்கு கொடுக்கும் கட்டணம் மிச்சம்தான் என நினைப்பார்கள். ஆனால் பிறகு பெரிய செலவுகளை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். வெளிநாடுகளில் டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் எந்த மருந்துகளையும் வாங்க முடியாது. அதனால் அவர்கள் தேவையில்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது. அங்கு பார்மஸி படித்தவர்கள் மட்டுமே மருந்துக் கடைகளில் இருக்கிறார்கள்.

இங்கு அதிகம் படிக்காதவர்களே மருந்துக் கடைகளில் இருக்கிறார்கள். டைகுளோபினக் என்னும் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் செயலிழக்கும். நீரிழிவுக்கு கொடுக்கும் மாத்திரைகள் சிலவற்றை டோஸ் அதிகமாக எடுத்தால் சிறுநீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்தும். நீரிழிவுக்கான சில மாத்திரைகளை இதய நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடாது. ஆகவே, டாக்டரின் முறையான அறிவுரைகளைப் பின்பற்றுவது நல்லது.

ஒரே நாளில் பல மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் ‘டேப்ளட் பாக்ஸ்’ என்ற மாத்திரைகளுக்கான பெட்டியை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. அதில் எந்த வேளைக்கு எத்தனை மாத்திரைகள் என பிரித்து எடுத்து வைத்துக்கொண்டால் குழப்பம் நேராது. முதியவர்களைப் பொருத்தவரை, ஒரு செவிலியரின் அல்லது குடும்ப உறுப்பினர்களின் மேற்பார்வையில் எடுத்துக் கொள்வதே நல்லது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon