மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

மும்பை தாக்குதலில் பணியாற்றிய சீசர் மரணம்!

மும்பை தாக்குதலில் பணியாற்றிய சீசர் மரணம்!

கடந்த 2008ஆம் ஆண்டு, மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலரின் உயிரைக் காப்பற்றிய காவல் மோப்ப நாய் சீசர், உடல்நலக் குறைவால் நேற்று காலை இறந்தது.

மோப்ப நாயான சீசர், மும்பை போலீஸின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பணியில் ஈடுபட்டு வந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 164 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலின்போது, மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கையெறி குண்டுகளை சீசர் கண்டுபிடித்து பலரது உயிரைக் காப்பாற்றியது. இதுமட்டுமல்லாமல், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த நரிமன் ஹவுசில் மூன்று நாட்கள் தேடுதல் பணியிலும் ஈடுபட்டது. மேலும் மும்பையில் கடந்த 2006ஆம் ஆண்டு ரயில் குண்டுவெடிப்பு மற்றும் 2001ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு ஆகியவற்றின்போது சிறப்பாகப் பணியாற்றியது.

இந்நிலையில், சீசருடன் இணைந்து பணியாற்றிவந்த டைகர், கடந்த சில மாதங்களுக்குமுன் இறந்த துக்கம் தாங்காமல் சீசர் மனஉளைச்சலுக்கு ஆளானது. அதையடுத்து, கொஞ்சநாளில் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, சீசர் கடந்த ஜுன் மாதத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர், விலங்குகள் நல ஆர்வலர் பிஸாக் சாஷாவின் விலங்குகள் பண்ணையில் ஓய்வெடுத்து வந்தது. இந்நிலையில், உடல்நிலை மோசமாகி சீசர் நேற்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தது. சீசர் உயிரிழந்த செய்தியை போலீஸ் அதிகாரி அசோக் தூதே தெரிவித்தார்.

சீசரின் மரணம் குறித்து மும்பை மாநகரப் போலீஸார் தங்களது ஆழந்த இரங்கலை, ட்விட்டரில் புகைப்படங்களைப் பகிர்ந்து சீசருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். காவல்துறைக்காக சிறப்பாகப் பணியாற்றிய சீசருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

மும்பைத் தாக்குதலில் காவல் துறைக்கு உதவியாக இருந்த மேக்ஸ், சுல்தான், டைகர், சீசர் ஆகிய மோப்ப நாய்கள் பணியாற்றி வந்தன. சீசர்தான் கடைசியாகப் பணியாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon