மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

டிஜிட்டல் திண்ணை:‘கடவுள் கைவிட மாட்டாரு!’ - ராஜாத்தி அம்மாளிடம் கலங்கிய சசிகலா!

டிஜிட்டல் திண்ணை:‘கடவுள் கைவிட மாட்டாரு!’ - ராஜாத்தி அம்மாளிடம் கலங்கிய சசிகலா!

மொபைல் டேட்டா ஸ்வைப் செய்தோம். வாட்ஸ் அப்பில் இருந்துதான் முதல் மெசேஜ் வந்தது.

‘உள்ளாட்சிக்கு முன்பு அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் என்பது உறுதியாகிவிட்டது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக கிட்டத்தட்ட முடிவு செய்திருப்பது பற்றி நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தோம். தேர்தல் மூன்று தொகுதிகளுக்கு நடந்தாலுமே இதில் முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதியாக மாறியிருப்பது அரவக்குறிச்சிதான். திமுக சார்பில் இங்கு முன்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கே.சி.பழனிசாமி. ஆனால் சில வாரங்களுக்குமுன்பு ஸ்டாலினை சந்தித்த கே.சி.பழனிசாமி, ‘இந்தமுறை அரவக்குறிச்சி எனக்கு வேண்டாம். வேற யாருக்காவது கொடுத்துடுங்க…’ என்று சொன்னாராம். இந்தத் தகவல் பரவியதும் அரவக்குறிச்சி தொகுதிக்கு திமுக வேட்பாளராக போட்டியிட இருவரின் பெயர் அடிபட்டது. அந்த இருவருமே இறந்துபோன வாசுகி முருகேசன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாசுகியின் சகோதரர் ரவிகுமார், சகோதரி விமலா. இருவரில் ஒருவருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் எனச் சொன்னார்கள். ஆனால் மாவட்டப் பொறுப்பாளரான நன்னியூர் ராஜேந்திரனோ, ‘இடைத் தேர்தல் மாதிரிதான் இது. இங்கே, புதுசா ஒரு வேட்பாளரை நிறுத்தி டெஸ்ட் பண்ண முடியாது. கே.சி.பி. அண்ணன் மட்டும்தான் ஒரே சாய்ஸ்’ என, ஸ்டாலினிடம் சொல்லிவிட்டாராம். அதற்குப் பிறகுதான் ஸ்டாலின் மீண்டும் கே.சி.பழனிசாமியை அழைத்துப் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமிதான் என்பது உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது” என்பதுதான் அந்த மெசேஜ்.

தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக வைத்திருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ் படித்து முடித்ததும் தனது ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.

“முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி விசாரிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்தபடியே இருக்கிறார்கள். நேற்று மாலை திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரிடம் இருந்து மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு போன் போயிருக்கிறது. ‘அப்படியா.. தாராளமாக வரச் சொல்லுங்க…’ என்று சொல்லியிருக்கிறது அந்தக் குரல். யார் பேசியது… யாரிடம் பேசியது என்பதெல்லாம் சீக்ரெட். நேற்று இரவு 9 மணிக்கு ஒரு கார் அப்பல்லோ மருத்துவமனைக்குள் வந்தது. காவல் துறைக்கு முன்கூட்டியே தகவலும் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்தக் காரை அவர்கள் நிறுத்தவில்லை. நேராக மருத்துவமனையின் மெயின் பில்டிங் முன்பு போய் நின்றது. காரிலிருந்து இறங்கியவர் ராஜாத்தி அம்மாள். திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார். அங்கே காத்திருந்த டாக்டர் சிவகுமார், காரிலிருந்து இறங்கிய ராஜாத்தி அம்மாளுக்கு வணக்கம் சொல்லி, நேராக லிஃப்ட்டுக்கு அழைத்துப் போனார். லிஃப்ட் போய் நின்றது இரண்டாவது தளம். லிஃப்ட்டில் இருந்து இறங்கிய ராஜாத்தி அம்மாவை சசிகலா தங்கியிருக்கும் அறைக்கே அழைத்துப்போனார் சிவகுமார். முதல்வர் ஜெயலலிதாவை பார்க்கப்போனவர்களில், இதுவரை யாரும் சசிகலா தங்கியிருக்கும் அறைக்குள் போனது இல்லை. அவரது அறைக்குள் போன முதல் நபர் ராஜாத்தி அம்மாள். சரியாக 40 நிமிடங்கள் இருவரும் பேசியிருக்கிறார்கள். இளவரசி மட்டும் அப்போது உடன் இருந்திருக்கிறார். முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்த ராஜாத்தி அம்மாள், ‘எந்த ரூம்ல அம்மா இருக்காங்க..?’ என்றும் கேட்டிருக்கிறார். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சசிகலா விலாவாரியாகவே சொன்னாராம். அப்போது ராஜாத்தி அம்மாள், ‘அவருக்கும் உடம்புக்கு ரொம்ப முடியலை. தினமும் சீராய்டு ஊசி போட்டுக்கிட்டு இருக்காங்க. இல்லைன்னா அவரே வந்துடுவாரு. நான் போறேன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாதா?’ என்று சொன்னாராம். அதற்கு சசிகலா, ‘அவரோட உடல்நிலையை பார்த்துக்கோங்க…’ என்றும் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

அதன்பிறகு, வெளியே வந்த ராஜாத்தி அம்மாவை பத்திரமாக மீண்டும் காரில் ஏற்றி அனுப்பும் வரை மன்னார்குடி குடும்பத்தினர் பார்த்துக் கொண்டார்கள். அப்பல்லோவில் இருந்து கிளம்பிய கார் நேராக கோபாலபுரம் போனது. அப்பல்லோவில் நடந்த சந்திப்பு பற்றியும், சசிகலா பேசியது பற்றியும் கருணாநிதியிடம் சொல்லியிருக்கிறார் ராஜாத்தி அம்மாள். ‘உடல்நிலை இப்போ தேறிட்டு இருக்கு… கடவுள் கைவிட மாட்டாரு’ன்னு சசிகலா சொன்னாங்க. அவங்கதான் ரொம்பவும் சோகமாக இருக்காங்க. என்ன ஆறுதல் சொன்னாலும் அவங்களை சமாதானப்படுத்த முடியலை’ என்றும் கருணாநிதியிடம் ராஜாத்தி அம்மாள் சொன்னாராம். எல்லாவற்றையும் கேட்ட கருணாநிதி, ‘சரியாகிடும். வந்துடுவாங்க’ என்று மட்டும் சொன்னாராம்.” என்பதுதான் அந்த போஸ்ட்.

அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், ‘நல்லபடியாக குணமாகி திரும்பட்டும்! அதுதானே எல்லோரது விருப்பமும்!’ என்று கமெண்ட் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon